India

“போலி சான்றிதழ் கொடுத்தவர் தேசிய மருத்துவ ஆணைய செயலாளரா?” - பா.ஜ.க அரசின் தகிடுதத்தம் அம்பலம்!

தேசிய மருத்துவ ஆணையத்தின் செயலாளராக நியமிக்கப்பட்ட டாக்டர்.ஆர்.கே.வாட்ஸை நீக்கக் கோரி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு, டாக்டர். கலாநிதி வீராசாமி எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடி, குஜராத் பல்கலைக்கழகம் ஒன்றில் முதுகலைப் பட்டம் பெற்றதாகக் கூறப்பட்டது. ஆனால் அதுகுறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டப்பட்டதற்கு, கல்வித் தகுதி ஆவணங்களை வெளியிட முடியாது என மறுக்கப்பட்டது. இதுகுறித்த சர்ச்சைக்கு இன்னும் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை.

இந்நிலையில் மருத்துவ முதுகலைப் பட்டத்தை போலியாகத் தயாரித்ததாகக் குற்றம்சாட்டப்படும் டாக்டர் ஆர்.கே.வாட்ஸ் தேசிய மருத்துவ ஆணையத்தின் செயலாளராக நீடிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர்.ஆர்.கே.வாட்ஸ், எங்கள் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெறவில்லை என சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகமே அறிவித்துள்ள நிலையில் அதுகுறித்து விசாரிக்காமல் மோடி அரசு அவரைப் பாதுகாப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.

தி.மு.க எம்.பி., டாக்டர்.கலாநிதி வீராசாமி எழுதியுள்ள கடிதத்தில், “தேசிய மருத்துவ ஆணையத்தின் செயலாளர் பதவிக்கு, மருத்துவப் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே தகுதியானவர்கள் எனும் நியமன விதி நடைமுறையில் உள்ளது என்பதை அறிவோம்.

ஆனால், முதுகலை மருத்துவப் படிப்பில் போலிப் பட்டம் பெற்றதாக, போலிச் சான்றிதழ் சமர்ப்பித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர், டாக்டர்.ஆர்.கே.வாட்ஸ். "இவர், எங்கள் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெறவில்லை" என சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகமே அறிவித்துள்ளது.

இந்நிலையில், இப்பதவிக்குரிய தகுதிக்கான விதிமுறைகளை மீறி, இவரை தேசிய மருத்துவ ஆணையத்தின் செயலாளராக மத்திய அரசு நியமித்துள்ளது. இது விதிகளுக்குப் புறம்பானது. எனவே, டாக்டர்.ஆர்.கே.வாட்ஸின் நியமனத்தை ரத்து செய்து, அவரை இடைநீக்கம் செய்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோருகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நிறைவு.. நாளை பரிசீலனை.. கரூரில் போட்டியிட 70 பேர் மனு தாக்கல்!