India

பா.ஜ.க அரசின் பேச்சைக் கேட்காத ட்விட்டர் : ‘Koo’ எனும் செயலி அறிமுகம்.. அச்சுறுத்தப்படும் கருத்துரிமை!

டெல்லியின் எல்லைகளில் இரண்டு மாதங்களுக்கு மேலாக போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க பல்வேறு சூழ்ச்சிகளில் மத்திய மோடி அரசு ஈடுபட்டு வருகிறது. இவற்றையெல்லாம் கடந்து ஜனநாயக முறையில் அமைதி வழியில் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் விளைவிக்காமல் விவசாயிகள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இப்படி இருக்கையில், அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக விவசாயிகள் போராட்டம் தொடர்பான தகவல்களை வெளியிட்ட 500 ட்விட்டர் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது. இந்த கணக்குகளை முடக்கிய பிறகும் ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய மோடி அரசு பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறது.

முன்னதாக விவசாயிகளின் போராட்டம் குறித்து கருத்துத் தெரிவித்தவர்களை, வன்முறையைத் தூண்டுவதாக கூறி 1,178 கணக்குகளை நீக்கும்படி ட்விட்டர் நிறுவனத்திற்கு மோடி அரசு பட்டியல் ஒன்றை அளித்துள்ளது.

இந்தப் பட்டியலில் வெறும் 500 பேரின் கணக்குகளை மட்டும் நீக்கிய ட்விட்டர் நிறுவனம், “கருத்து உரிமைக்கும், வன்முறை தூண்டும் பதிவுகளுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. அதனால் அனைத்து கணக்குகளையும் முடக்க முடியாது” என ட்விட்டர் நிறுவனம் மத்திய அரசுக்கு பதில் அளித்தது.

மத்திய அரசுக்கு ட்விட்டரின் பதில் அதிர்ச்சி அளிக்கவே பல்வேறு நெருக்கடிகளை ட்விட்டர் நிறுவனத்திற்கு எதிராக தொடுத்துள்ளது மத்திய அரசு. அதேவேளையில், அரசின் கொள்கையோடு ஒத்துப்போகாததால் அரசுக்கு எதிராக நிற்கிறது ட்விட்டர்.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த ட்விட்டர் நிறுவனம், “இந்திய அரசின் விதிமுறைகளுக்கு எதிராக செயல்படும் கணக்குகளை முடக்கியுள்ளோம். அதேவேளையில் கருத்துகளை பொதுத்தளத்தில் பயனாளர்கள் வெளியிடுவதையே நாங்கள் விரும்புகின்றோம். அதனால், செய்தி ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அடங்கிய கணக்குகள் குறித்து நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதுமட்டுமல்லாது, கருத்துரிமையை ஆதரிக்கும் நாங்கள், அதனை அரசின் விதிகளுக்கு கொண்டுவரவும் முயற்சிக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளது. ட்விட்டர் நிறுவனத்தின் இத்தகைய அறிக்கையால் மேலும் கொதிப்படைந்த மோடி அரசு, “பேச்சுவார்த்தை எனக் கூறிவிட்டு பொதுதளத்தில் தங்களது தரப்பு விளக்கத்தை ட்விட்டர் வெளியிட்டிருப்பது அசாதாரணமானது.

இந்த விவகாரத்தில் இந்திய அரசின் பதில் விரைவில் பகிரப்படும். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டர் நிர்வாக அதிகாரிகள் கைது செய்யப்பட்டலாம்” என எச்சரித்துள்ளது. இதற்கிடையில் ட்விட்டர் நிறுவனத்தின், இந்தியா மற்றும் தெற்காசியாவுக்கான பொதுக் கொள்கைக்கான இயக்குநர் மஹிமா கவுல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மஹிமா கவுல் என்பவர் இந்தியாவில் ட்விட்டரின் கம்யூனிட்டி ஸ்டாண்டர்ட் பற்றி தீர்மானிப்பவர். அரசியல் மற்றும் சமூக சூழல்களை ஒப்பிட்டு விதிமுறைகளை வகுப்பவர். அதுமட்டுமல்லாது, ட்விட்டரின் கொள்கைகள் இந்திய அரசை பாதிக்காத வண்ணம் இருப்பதற்கான எல்லா சாத்தியங்களையும் உருவாக்கி நிறுவனத்துக்கு வருமானம் ஈட்டிக் கொடுக்கக் கூடிய முக்கியமான பணி. இந்த தொடர் நெருக்கடியில் மத்தியில், மஹிமா கவுல் பதிவியை ராஜினமா செய்திருக்கிறார்.

மேலும் ட்விட்டர் நிறுவனத்திற்கு மாற்றாக ‘கூ’ செயலியை தற்போது பிரபலப்படுத்தி வருகிறது மத்திய அரசு. ட்விட்டர் செயலி மாதிரியான சமூக வலைதளமாக ‘கூ’ உள்ளது. இதனால் ‘கூ’ செயலியை வலுப்படுத்துவதற்காக மத்திய அமைச்சர்கள் பலரும் ‘கூ’ செயலிக்கு மாறியுள்ளனர்.

இதனால் மத்திய அமைச்சகங்கள் ட்விட்டருக்கு பதிலாக ‘கூ’ செயலியை பயன்படுத்த தொடங்கி உள்ளதாலும், ட்விட்டருக்கு எதிராக செயல்களில் இறங்கி இருப்பதாலும், இந்தியாவில் ட்விட்டருக்கு தடை விதிக்கப்படக் கூடும் என்ற சந்தேகம் சமூக வலைதளங்களில் பலருக்கும் எழுந்துள்ளது.

மேலும் சிலர் ட்விட்டர் நிறுவனத்திற்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் கருத்துரிமை குறித்து ட்விட்டர் அளித்துள்ள விளக்கம் சரிதான் என ஆதரவுக் குரல் எழுகின்றனர்.

முன்னதாக அமெரிக்காவில் போலிஸாரால் கொல்லப்பட்ட கருப்பின இளைஞர் விவகாரத்தில் முன்னாள் அதிபர் ட்ரம்பின் கருத்தை ட்விட்டர் நிறுவனம் அதிரடியாக முடக்கியது. ஒரு நாட்டின் அதிபராக இருந்தாலும் தவறான கருத்து தெரிவித்தால் அதற்கு இங்கு அனுமதியில்லை எனக் கூறியது ட்விட்டர்.

“கருத்துரிமைக்கு என்றுமே ட்விட்டர் முழு சுதந்திரம் கொடுக்கும். அதேநேரத்தில் தவறான கருத்தை யார் பதிவிட்டாலும் அதற்கு ட்விட்டர் வழிவிடாது” என்பதே தங்கள் நிறுவனத்தின் தாரக மந்திரம் என அடிக்கடி கூறுவார் ட்விட்டர் நிர்வாக இயக்குநர் ஜாக் டோர்சே.

Also Read: விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவளித்த கணக்குகள் நீக்கம்: Twitter உயர்அதிகாரி பதவி விலகலின் அரசியல் பின்னணி