இந்தியா

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவளித்த கணக்குகள் நீக்கம்: Twitter உயர்அதிகாரி பதவி விலகலின் அரசியல் பின்னணி

தொலைத்தொடர்பு அமைச்சகம் ட்விட்டர் நிறுவனத்துக்கு கடிதம் எழுதி சுமாராக 250 ட்விட்டர் கணக்குகளை முடக்க கோரியிருந்தது.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவளித்த கணக்குகள் நீக்கம்: Twitter உயர்அதிகாரி பதவி விலகலின் அரசியல் பின்னணி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

கடந்த தினத்தில் இரண்டு விஷயங்கள் நடந்திருக்கின்றன. முதலாவது, News Click இணைய ஊடக அலுவலகங்களில் ரெய்டு. இரண்டாவது, திருமுருகன் காந்தி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டவர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கிறது. இன்னும் பல கணக்குகள் செயல்பட முடியாத முடக்கத்தில் இருக்கின்றன.

விவசாய எழுச்சியும், இணையம் வழங்கும் பொதுவெளியும் பா.ஜ.க அரசை பல காலமாக அச்சுறுத்தி வந்திருக்கிறது. மிக சமீபத்திய உதாரணம் பாடகி ரிஹானாவின் ட்வீட்டும் அதற்கு பதிலடியாக ‘காப்பி பேஸ்ட்’ செய்த இந்திய பிரபலங்களின் ட்வீட்களும்.

பா.ஜ.கவின் சிறப்பே என்னவெனில், சாமர்த்தியமாக செய்வதாக நினைத்துக் கொள்வது. ஆனால், அது செய்யும் எதுவும் அத்தனை சாமர்த்தியமாக இருக்காது. மிகக் கேவலமாக பல்லிளித்துவிடும். அப்படித்தான் ரிஹானா மீதான ட்வீட் போரில் பா.ஜ.க தோற்றது. அந்த தோல்வி ஏற்படுத்திய கோபம் ஜனநாயகவாதிகளுக்கு கொடுக்கும் இயங்குவெளி பக்கம் தற்போது திரும்பியிருக்கிறது.

சில நாட்களுக்கு முன் ஒரு செய்தி வந்தது. ட்விட்டர் நிறுவனத்தை சேர்ந்த இந்திய ஊழியர் ஒருவர் பதவி விலகியதாக ஒரு செய்தி. ஊழியரின் பெயர் மஹிமா கவுல். இவர் வகித்த பொறுப்பு என்பது இந்தியா மற்றும் தெற்காசியாவுக்கான பொதுக் கொள்கைக்கான இயக்குநர்.

அதாவது, இந்தியாவில் கம்யூனிட்டி ஸ்டாண்டர்ட் என்னவாக இருக்க வேண்டும் என இங்கிருக்கும் அரசியல் மற்றும் சமூக சூழல்களை ஒப்பிட்டு முடிவு செய்பவர். இந்திய அரசுடன் தொடர்பில் இருக்கக் கூடியவர். ட்விட்டரின் கொள்கைகள் இந்திய அரசை பாதிக்காத வண்ணம் இருப்பதற்கான எல்லா சாத்தியங்களையும் உருவாக்கி நிறுவனத்துக்கு வருமானம் ஈட்டிக் கொடுக்கக் கூடிய முக்கியமான பணி.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவளித்த கணக்குகள் நீக்கம்: Twitter உயர்அதிகாரி பதவி விலகலின் அரசியல் பின்னணி

மகிமா கவுல் பதவி விலகுவதற்கு காரணமாக வழக்கம் போல் முதலாளிகள் சொல்லும் ‘தனிப்பட்ட காரணங்களை’ சுட்டிக் காட்டி நீலிக்கண்ணீர் வடித்திருக்கிறது ட்விட்டர் நிறுவனம். இந்த வருட துவக்கத்திலேயே மகிமா பதவி விலக முடிவெடுத்துவிட்டார் என்றும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தனிப்பட்ட உறவுகளிலும் கவனம் செலுத்த விரும்பி அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டு கண்ணில் ஜலம் வைத்திருக்கிறது நிறுவனம்.

கடந்த வாரத்தில் இன்னொரு முக்கியமான செய்தி வெளியானது. இந்திய அரசு ட்விட்டருக்கு காட்டமாக கடிதம் எழுதியதாக ஒரு செய்தி. விவசாயிகள் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் சூழலில் மோடியை துப்பியும் கிழித்தும் பல ட்வீட்கள் வெளியாயின. குறிப்பாக குடியரசு தினத்தன்று. பல ஹேஷ்டேக்குகள் அன்று மோடியை திட்டி உலகளவில் ட்ரெண்டாயின.

அது குறித்து தொலைத்தொடர்பு அமைச்சகம் ட்விட்டர் நிறுவனத்துக்கு கடிதம் எழுதி சுமாராக 250 ட்விட்டர் கணக்குகளை முடக்க கோரியிருந்தது. ட்விட்டர் நிறுவனமும் அந்த கணக்குகளை முடக்கியது. அதில் பல விவசாய சங்க பக்கங்களும் அடக்கம். பெரிய அளவில் ட்விட்டரின் கயமை விவாதிக்கப்பட்டதும் அந்த கணக்குகளின் முடக்கத்தை நீக்கியது ட்விட்டர்.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவளித்த கணக்குகள் நீக்கம்: Twitter உயர்அதிகாரி பதவி விலகலின் அரசியல் பின்னணி

அதற்குப் பிறகுதான் இந்திய அரசின் காட்டமான கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. ‘அரசு முடக்கச் சொன்ன ட்விட்டர் கணக்குகளின் முடக்கத்தை நீக்கியதில் ட்விட்டர் இந்தியச் சட்டத்தை மீறியிருக்கிறது. சட்டப்பூர்வமான நடவடிக்கை நிறுவனத்தின் மேல் எடுக்கப்படும்’ என தர்மாவேசத்தை கொட்டியிருந்தது கடிதம். பிறகுதான் மகிமா கவுலின் பதவி விலகல் பற்றிய செய்தி வந்திருக்கிறது. பலரது கணக்குகளை முடக்கும் வேலை தொடங்கப்பட்டிருக்கிறது.

ஹிட்லர், முசோலினி தொடங்கி மெக்கார்த்தியின் கம்யூனிஸ்டு வேட்டை வரை அரசுகள் செய்யும் வேலைதான் இது. தற்போது மதம், சாதி, பேரினவாதம் முதலியவற்றுடன் தற்போது பாசிசம் சேர்ந்திருப்பதால் முன்பை விட அதிக தாக்கமும் இழப்பும் நம் பக்கமே ஏற்படும். அவற்றை சொல்லவேனும் நமக்கான தளம் இருத்தல் வேண்டும்.

முதலாளிகள் பயன்படுத்தும் ஊடகத்தில் தனிப்பட்ட தகவல் மட்டுமின்றி ஜனநாயகத்தன்மையும் மறுக்கப்படும் என்பது உறுதியாகிக் கொண்டிருக்கையில், இலவச மென்பொருள் முதலிய மாற்று வழிகளை நாடும் இடத்தில் இருக்கிறோம்.

அதேநேரம் இந்தியத் தயாரிப்பு என்கிற பெயரில் Koo என்கிற சமூக வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், தற்போது பா.ஜ.க சார்புள்ள பிரபலங்கள் இணைந்துவருவதாகவும், இது ஒரு முழுமையான Bharat Product என்றும் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவும் பா.ஜ.க பிரசாரத்தில் ஒன்று. இதில் தேச பக்தி அதிகமாகவும், ஜனநாயகத்தன்மை குறைவாகவும்தான் இருக்கும் என்பது சொல்லித் தெரியதேவையில்லை.

எனவே, இது அனைத்தும் சாத்தியமாகும் மாற்று தொழில்நுட்பம் அரசியலாயுதமாக்கப்பட வேண்டும்! என்பதே இப்போது எழுந்திருக்கும் கோரிக்கை.

banner

Related Stories

Related Stories