
தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் தீவிர முயற்சியால் பட்டியலின பழங்குடியின மக்கள் மேலே வந்துகொண்டிருக்கின்றனர். இருப்பினும் தற்போதும் பல இடங்களில் அவர்கள் சாதிய ரீதியான முறையில் அடக்குமுறைகளுக்கு உள்ளாகின்றனர். இந்த சூழலில் ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் மீது தங்கள் வன்மத்தை காட்டி வருகின்றனர்.
அதன் எதிரொலியாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் ஒன்றிய பாஜக, தேர்தல் ஆணையத்தை வைத்து நாடு முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியலை மேற்கொள்ள முயன்று வருகிறது. ஏற்கனவே பீகாரில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது அம்பலமாகியுள்ளது.

இருப்பினும் தற்போது தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நவம்பர் மாதம் முதல் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தும் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதிமுக தனது முழு ஆதரவையும் வரவேற்பையும் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் குறித்து தமிழ்நாடு முழுவதும் விவாதம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விவாதத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் மற்றும் ஐ.டி.விங் பொறுப்பாளர் கோவை சத்யன் கலந்துகொண்டார்.

அப்போது கோவை சத்யன் பேசுகையில், “பெயரை பார்த்தவுடன் இவர் ஒடுக்கப்பட்டவர்.. இவர் பிதுக்கப்பட்டவர்.. இவர் நசுக்கப்பட்டவர்.. என்று சொல்ல முடியுமா?" என்று பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசினார். அதிமுக நிர்வாகி பாதிக்கப்பட்ட மக்களை கேலி செய்யும் வகையில் பேசியதை, அந்த நேரலை விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திமுக SKP கருணா, விசிக எம்.எல்.ஏ. ஆளூர் ஷா நவாஸ் மற்றும் நெறியாளர் கண்டித்தனர்.
இதையடுத்து கோவை சத்யன் பேசிய இந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பியது. மேலும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். இந்த சூழலில், "வாக்காளர் பெயரை பார்த்து இவர் நசுக்கப்பட்டவர்,ஓடுக்கப்ப்ட்டவர் என்று அடையாளம் கண்டு நீக்க முடியுமா ? இப்படி சொல்வது தவறான அரசியல் சாயம் என்று நான் பேசியதை கேட்டு பதிவு போடவும். மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது." என்று கோவை சத்யன் தனது சமூக வலைதள பக்கத்தில் திமிராக பதிவிட்டிருந்தார்.
கோவை சத்யனின் இந்த அடாவடியான பேச்சுக்கு வழக்கம்போல் அதிமுக தலைமையும் அமைதி காத்து வருகிறது. அதிமுக நிர்வாகி சாதி ரீதியான இப்படி ஒரு வார்த்தையை கூறியதற்கு, அதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று எகத்தாளமாக பேசியதற்கும் திமுக, விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பலரும் கோவை சத்யன் மற்றும் அதிமுகவை கடுமையாக கண்டனம் தெரிவித்தும் விமர்சித்தும் வருகின்றனர்.






