India

விவசாயிகளுக்கு ஆதரவாக பதிவிட்ட ட்விட்டர் கணக்குகள் முடக்கம்.. ஜனநாயக குரல்வளையை நெறிக்கும் மோடி அரசு!

டெல்லியின் எல்லைகளில் இரண்டு மாதங்களுக்கு மேலாக போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க பல்வேறு சூழ்ச்சிகளில் மத்திய மோடி அரசு ஈடுபட்டு வருகிறது. இவற்றையெல்லாம் கடந்து ஜனநாயக முறையில் அமைதி வழியில் பொது மக்களுக்கு எவ்வித பங்கமும் விளைவிக்காமல் விவசாயிகள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இப்படி இருக்கையில், வருகிற, பிப்ரவரி 6ம் தேதி நாடு முழுவதும் முக்கிய சாலைகளில் டிராக்டர்களை நிறுத்தி போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர். அன்றைய தினம் நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

இதனிடையே போராட்டம் நடைபெறும் இடங்களில் குடிநீர் முழுமையாக நிறுத்தப்பட்டிருப்பதாகவும், கழிவறை போன்ற வசதிகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Also Read: “வேளாண் சட்டங்களை திரும்பப்பெற தி.மு.க தொடர்ந்து போராடும், தனிக்கட்சியாக நின்று போராடும்” : டி.ஆர்.பாலு

மேலும், அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் அடிப்படையில் விவசாயிகள் போராட்டம் தொடர்பான தகவல்களை வெளியிட்ட 250 ட்விட்டர் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கி இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதுமட்டுமல்லாமல், விவசாயிகள் போராட்டத்தை தடுக்க முள்வேலி தடுப்புகள் போடப்பட்டு பல அடுக்கு காவலர்கள் காசிபூர், சிங்கு உள்ளிட்ட போராட்ட இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். அதே போன்று தேசிய நெடுஞ்சாலையின் நடுவே விவசயிகளைத் தடுக்க காங்கிரீட் தடுப்புச் சுவர்களும் எழுப்பப்பட்டு வருகின்றன.

இதனிடையே கைது செய்யப்பட்ட 120 விவசாயிகளை உடனடியாக விடுவிக்கக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் விவசாயிகள் தரப்பில் பொதுநல வழக்கு ஒன்றும் தொடரப்பட்டுள்ளது. இது விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: “மோடி-அமித்ஷா இடையேயான போட்டியால் அலைக்கழிக்கப்படும் விவசாயிகள்” - பி.ஆர்.பாண்டியன் கடும் குற்றச்சாட்டு!