India
சாகித்ய அகாடமி விருதுகளை திருப்பியளித்த எழுத்தாளர்கள் : பா.ஜ.க அரசை கடுமையாக எதிர்க்கும் பஞ்சாப்!
வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சாகித்ய அகாடமி விருதுபெற்ற பஞ்சாப் எழுத்தாளர்கள் தங்கள் விருதுகளைத் திருப்பி அளித்துள்ளனர்.
பா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளும், விவசாய அமைப்புகளும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ‘டெல்லி சலோ’ எனும் பெயரில் நடைபெற்றுவரும் போராட்டம் 9வது நாளாக நீடித்து வருகிறது.
கொரோனா அச்சுறுத்தல், கடும் குளிர் போன்ற இடர்களைப் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், மத்திய அரசு அவர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து வருவதால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக் கோரி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க சார்பில் நாளை கருப்புக்கொடி அறப்போராட்டம் நடைபெற உள்ளது.
இதற்கிடையே, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பத்மஸ்ரீ விருது பெற்ற மல்யுத்த வீரர் கத்தார் சிங், அர்ஜுனா விருது பெற்ற குருமெயில் சிங், முன்னாள் ஹாக்கி கேப்டன் ராஜ்பீர் கவுர், அர்ஜுனா விருது பெற்ற கூடைப்பந்து வீரர் சஷன் சிங் ஆகியோர் விருதுகளை திரும்பப் தரப்போவதாக அறிவித்தனர்.
மேலும், பஞ்சாப் முன்னாள் முதல்வரும், அகாலி தளம் மூத்த தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் மத்திய அரசு வழங்கிய பத்ம விபூஷண் விருதைத் திருப்பி வழங்கினார். அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுக்தேவ் சிங் திண்சா தனக்கு வழங்கிய பத்ம பூஷண் விருதைத் திருப்பி வழங்கப்போவதாக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து தற்போது பஞ்சாப்பின் மூத்த எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும், அரசுக்கு எதிராக தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் விதமாக தங்கள் விருதுகளைத் திருப்பி அளித்துள்ளனர்.
பஞ்சாப்பில் சாகித்ய அகாடமி விருது பெற்ற சிர்மோர் ஷைர் டாக்டர் மோகன்ஜித், சிந்தனையாளர் டாக்டர் ஜஸ்விந்தர் சிங், நாடக ஆசிரியர் திரிபூன் ஸ்வராஜ்பீர் ஆகியோர் விவசாயிகளுக்கு ஆதரவாக தங்கள் விருதுகளை மத்திய அரசிடம் திருப்பி அளித்துள்ளனர்.
Also Read
-
திருத்தணி வட மாநில இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம் : நடந்தது என்ன? - வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் விளக்கம்!
-
“கோவை மக்களுக்கு 2026 புத்தாண்டுக்கான பரிசு இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
கோவையில் 11,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய துணை முதலமைச்சர் : புதிய திட்டங்களுக்கு அடிக்கல்!
-
VBG RAMG சட்டத்தை எதிர்க்கும் பஞ்சாப் : சட்டமன்றத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு!
-
புத்தாண்டு கொண்டாட ஊருக்கு போறீங்களா?... : அப்போ உங்களுக்கான செய்திதான் இது!