India

“தேசிய கீதம் தெரியாது; ஊழல் செய்யத் தெரியும்” - பதவியேற்ற நான்கே நாளில் ராஜினாமா செய்த கல்வி அமைச்சர்!

பதவியேற்ற நான்கே நாட்களில் பீகார் மாநில கல்வி அமைச்சர், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த நவம்பர் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மெகா கூட்டணி 110 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இதையடுத்து, பிகார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் கடந்த 16ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 14 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ மேவலால் சவுத்ரி, கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

இந்நிலையில் மேவலால் சவுத்ரி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் தேசியக்கொடியை ஏற்றியபின் தேசிய கீதம் பாடும்போது வரிகள் தெரியாமல் திணறுவது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது.

இதையடுத்து, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பல ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டும் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மேவலால் சவுத்ரிக்கு தேசிய கீதம் கூட தெரியாதது மாநிலத்திற்கே அவமானகராமானது எனக் கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில், பதவியேற்ற நான்கே நாட்களில் கல்வி அமைச்சர் மேவலால் சவுத்ரி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பல ஊழல் புகார்களில் சிக்கிய மேவலால் சவுத்ரி எதிர்க்கட்சிகளின் நிர்பந்தத்தின் காரணமாக ராஜினாமா செய்ததாகத் தெரிகிறது.

Also Read: “மக்களின் பாதுகாப்பு தொடர்பான பணிகளிலும் உறுத்தலே இல்லாமல் ஊழல் செய்யும் அரசு” - மு.க.ஸ்டாலின் தாக்கு!