India

மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய GST நிதியை சட்டத்தை மீறி எடுத்த மோடி அரசு: CAG அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

மத்திய தணிக்கை வாரியமான சி.ஏ.ஜி (Comptroller and Auditor General of India) கடந்த புதன்கிழமை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் தணிக்கை அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின் மூலம் மோடி அரசு, சட்டத்தை மீறி பல மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது அம்பலமானது.

மேலும் ஜி.எஸ்.டி வரி தொடர்பாக அறிக்கையில் சட்டத்தை மதிக்காமல் பல்வேறு முறைகேடுகளில் மோடி அரசு ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக, இந்திய கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (Comptroller and Auditor General – CAG) அறிக்கையில், சரக்கு மற்றும் சேவை வரி விதிமுறைகளில் தனது சொந்த சட்டத்தையே மீறி ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையில் சுமார் ரூ.47,272 கோடியை தக்க வைத்துக்கொண்டதாக குறிப்பிட்டள்ளது.

அதாவது, நிதி இழப்பின் போது மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய பயன்படுத்தப்பட வேண்டிய இழப்பீடு தொகையை, மத்திய அரசு வேறு பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்திக் கொண்டதாகவும், இந்த விதிமீறல்கள் கடந்த 2017 -18 மற்றும் 2019 ம் ஆண்டுகளில் நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளது.

இதனால், 2017-18 மற்றும் 2018-19-ல் ஜி.எஸ்.டி இழப்பீட்டு நிதியில் சேர்க்கப்பட வேண்டிய ரூ.47, 272 கோடி சேர்க்கப்படவில்லை. இது ஜி.எஸ்.டி இழப்பீடு சட்டம் 2017-ஐ மீறிய செயல்; இது சட்ட மீறல் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இதுதொடர்பாக பொருளாதார வல்லுநர் ஒருவர் கூறுகையில், “ஜி.எஸ்.டி இழப்பீடு செஸ் சட்டம் 2017ன் படி, “ஓர் ஆண்டில் வசூலிக்கப்பட்ட அனைத்து செஸ் வரித்தொகையும் ஜி.எஸ்.டி இழப்பீடு நிதியில் எந்த வித பிரச்சனைகள் மற்றும் குறைகள் இன்றி சேர்த்து விடவேண்டும். ஏனென்றால், அது பொதுக்கணக்கின் ஒர் அங்கமாகும். அதன்மூலம் மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டியினல் ஏற்படும் வருவாய் இழப்பை சரிசெய்ய இழப்பீடாக வழங்கப்படும்.

ஆனால், தற்போது மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி அளிக்க சட்டத்தில் எந்த பிரிவும் இல்லை எனக் கூறி, ஜி.எஸ்.டி செஸ் வரி வசூல் தொகையை, ஜி.எஸ்.டி இழப்பீடு நிதியில் வைக்காமல், பொது நிதியில் வைத்து பிற தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டது. இதனால் வருவாய் வரவு அதிகமாகவும், நிதிப்பற்றாக்குறை குறைத்து காட்டுப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: ஆப்செண்ட் ஆன அன்புமணி; ஆதரித்து பேசிய ஓ.பி.ஆர் : வேளாண் மசோதாவை நிறைவேற்றிய மோடி அரசு !