India

“இந்தி மொழி படித்தால்தான் வளர்ச்சி அடையமுடியும் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை” - திருச்சி சிவா பேட்டி!

தி.மு.க பொதுக்குழு கூட்டம் காணொலி காட்சி மூலமாக இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்கள் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இருந்து கலந்து கொண்டனர். இதில் தெற்கு மாவட்ட பெறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி N.சிவா, சட்டமன்ற உறுப்பினர்கள் லால்குடி சௌந்தரபாண்டியன், துறையூர் ஸ்டாலின் குமார், மாநகரச் செயலாளர் அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச் செயலாளர், பொருளாளர், துணை பொதுச் செயலாளர்கள் ஆகியோரை வாழ்த்தி திருச்சி சிவா பேசினார்.

Also Read: தி.மு.க பொதுக்குழு: மருத்துவக் கல்வியில் சமூகநீதி.. EIA, NEPக்கு கண்டனம் என 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் திருச்சி சிவா, பேசியதன் விவரம் பின்வருமாறு :

பல சோதனைகளைக் கண்டு வெற்றி கொண்ட இயக்கம் தி.மு.க. எந்த நேரத்திலும் தன் லட்சியப் பணியை தி.மு.க நிறுத்தாது என்பதற்கு உதாரணம்தான் இன்று நடந்த பொதுக்குழு கூட்டம். வங்கிகளில் பிராந்திய மொழிகளை பயன்படுத்தக் கூடாது என்கிற எந்த உத்தரவையும் மத்திய அரசு பிறப்பிக்கவில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார்.

ஆனால் நடைமுறையில் வங்கிகளில் கொடுக்கப்படும் படிவத்திலும், ஏ.டி.எம்-களிலும் பிராந்திய மொழிகள் பயன்படுத்தப்படவில்லை என்பதை ஆதாரத்துடன் அனுப்பியுள்ளேன். வங்கிகளில் மாநில மொழியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இந்தி மொழியை படித்தால்தான் வளர்ச்சி அடைய முடியும் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. அனைத்து மொழிகளும் சம அந்தஸ்து கொண்டவை. ஒரு மொழியைக் கொண்டு மற்ற மொழிகளை அழிக்க நினைக்கும்போதும் அதை திணிக்கும்போதும் எதிர்ப்பு வரத்தான் செய்யும்.

20 ஆண்டுகளாக பாராளுமன்ற உறுப்பினராக டெல்லிக்கு சென்று வருகிறேன். ஆனால் எனக்கு இந்தி தெரியாது. நான் நன்றாகத்தான் இருக்கிறேன். இந்தியால் ஒருவர் வளர்ச்சியடைந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றார்.

Also Read: “தி.மு.க தலைவரிடம் உறுதியளிக்கிறேன்...” - பொதுச் செயலாளர் துரைமுருகன் உணர்ச்சிகர பேச்சு!