India

பா.ஜ.க-வுக்கு ஆதரவு - நாடாளுமன்ற நிலைக்குழு முன் ஆஜராக ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு உத்தரவு

பா.ஜ.கவினருக்கு ஆதரவாக ஃபேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் செயல்படுவதை அமெரிக்க பத்திரிகை கடந்த வாரம் அம்பலப்படுத்தியது.

பா.ஜ.கவினர் பரப்பும் வெறுப்பு பதிவுகள் புகார் அளித்தாலும் நீக்கப்படுவதில்லை என்று அமெரிக்க பத்திரிகை அம்பலப்படுத்தியது. பா.ஜ.கவினரின் பதிவுகளையோ, கணக்குகளையோ நீக்கினால் இந்தியாவில் தொழில் செய்வதில் பிரச்னை ஏற்படும் என்று ஃபேஸ்புக் இந்தியா கொள்கை பிரிவு தலைவர் அங்கி தாஸ் கூறியதாகவும், நடவடிக்கை எடுக்க வேண்டாம் என தடுத்து நிறுத்தியதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

கோடிக்கணக்கான பயனாளர்கள் கொண்ட ஃபேஸ்புக் நிறுவனம், பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவது தேர்தல் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்படுத்தும் என கண்டனங்கள் எழுந்தன. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து எழுப்பிவருகின்றன. டெல்லி வன்முறைக்கு பா.ஜ.கவின் வெறுப்பு பதிவுகள்தான் காரணம் என்று டெல்லி சட்டமன்றகுழு ஏற்கனவே சம்மன் அனுப்பியிருக்கிறது.

இதனிடையேதான் செப்டம்பர் 2 ஆம் தேதி ஃபேஸ்புக் நிறுவனத்தின் நிர்வாகிகள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தகவல் தொழில்நுட்ப துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் அனுப்பியுள்ளது.

இதற்கு பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் கருத்தைக் கேட்காமல் சம்மன் அனுப்பிய அதன் தலைவர் சசி தரூரை நீக்க வேண்டும் என்று பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் தூபே சபாநாயகருக்கு புகார் அளித்துள்ளார்.

Also Read: “போலி செய்திகளை பரப்ப ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பை ஆட்டுவிக்கும் பா.ஜ.க” - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!