India

கொரோனா விஸ்வரூபமெடுத்து வரும் நிலையில், அசாமை அச்சுறுத்தும் ‘வைரஸ் காய்ச்சல்’ - 100% இறப்பால் அதிர்ச்சி!

கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தியாவில் முதன்முறையாக ஆப்ரிக்க பன்றிக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இதன் பாதிப்பால் அசாமில் மாநிலத்தில் 2,500 பன்றிகள் பலியாகியுள்ளன.

போபாலின் தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் நிறுவனம் (NIHSAD) நடத்திய ஆய்வில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் அசாமில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வைரஸால் பாதிக்கப்பட்ட பன்றிகள் உயிரிழப்பதை தடுக்க இயலவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான திட்டம் குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.

பன்றியின் எச்சில், ரத்தம் மற்றும் திசுக்களின் வழியாகப் பரவும் இந்த வைரஸ் மற்ற பன்றிகளைத் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தும். இதனால் மனிதர்களுக்கு பாதிப்பு இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் சீனாவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், எல்லை வழியாக அசாம் மாநிலத்திற்கு பரவி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அசாம் மாநில கால்நடைத்துறை அமைச்சர் அதுல்போரா கூறுகையில், “இந்தியாவில் ஆப்ரிக்க பன்றிக்காய்ச்சல் நோய்க்கான முதல் நிகழ்வு இது என்று மத்திய அரசு எங்களுக்குத் தெரிவித்துள்ளது.

அசாம் மாநிலத்தின் ஏழு மாவட்டங்களில் உள்ள 306 கிராமங்களில் ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் காரணமாக 2,500 பன்றிகள் உயிரிழந்துள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லையா? அரசின் தோல்விக்கு சான்று” - ராஜினாமா குறித்து காங்கிரஸ் சாடல்!