India

"மகள் திருமணத்திற்காக நடந்தே ஊருக்குச் சென்றபோது விபத்து" - ஒரே குடும்பத்தின் மூவர் பலியான சோகம்!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு போக்குவரத்து முடக்கப்பட்டதால் புலம்பெயர் தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

வேலை இன்றி, உண்ண உணவின்றித் தவித்த பலர் கால்நடையாகவே நூற்றுக்கணக்கான கி.மீ தூரம் நடந்தே சென்றனர். செல்லும் வழியில் பலர் விபத்துகளாலும், பசியாலும் உயிரிழந்தனர்.

இந்நிலையில், டெல்லியில் இருந்து உத்தர பிரதேசத்தில் உள்ள தங்கள் கிராமத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளர்கள் மூவர் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் டெல்லியின் நரேலா பகுதியில் உள்ள தங்கள் வீட்டிலிருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள தங்கள் கிராமத்திற்கு நடந்தே செல்வதென முடிவெடுத்தனர்.

கடந்த மூன்று நாட்களாக 5 பேரும் 130 கிலோமீட்டர் நடந்து அலிகாருக்குச் சென்றனர். இந்நிலையில், நேற்று இரவு மத்ராக் பகுதிக்கு அருகிலுள்ள சாலையில் கோதுமை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று வந்துள்ளது.

அதில் ஏறினால், சில தூரம் செல்லலாம் எனத் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து, வண்டியை நிறுத்தி, டிராக்டரின் பின்புறம் அமைந்திருக்கும் டிராலியில் ஏறியுள்ளனர். அதிகாலை 2 மணி அளவில் புறநகர்ப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவர்களது டிராக்டர் டிராலி மீது ​​பின்னால் இருந்து வந்த லாரி வேகமாக மோதியுள்ளது.

இந்தக் கொடூர விபத்தில் டிராக்டரில் லிஃப்ட் கேட்டு பயணம் செய்த ரஞ்சித் சிங் (44) தினேஷ் (37) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தினேஷின் மனைவி சாந்தகுமாரி (32) என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் உயிரிழந்தார்.

ரஞ்சித் சிங்கின் மனைவி ராம்வதி (40), மகன் பாகிரத் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர். சொந்த ஊருக்குச் சென்ற வழியில் மூவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாத இறுதியில் ரஞ்சித் சிங் - ராம்வதி தம்பதியரின் மகள் மம்தாவுக்கு திருமணம் செய்ய திட்டமிடப்பட்டிருந்துள்ளது. இந்நிலையில், இப்படியொரு அதிர்ச்சி மரணம் ஏற்பட்டு அவர்களை நிலைகுலையச் செய்துள்ளது.

Also Read: “ஊரடங்கு நீடித்தால் பல லட்சம் பேர் வறுமையில் சிக்குவார்கள்” - ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் எச்சரிக்கை!