India

“மருத்துவ உபகரணங்களை தமிழக அரசு வாங்க தடை” : மாநில உரிமைகளை பறிக்கும் மோடி அரசுக்கு வைகோ கண்டனம்!

கொரோனா வேகமாக பரவி வரும் இந்த இக்கட்டான சூழலில் மாநில அரசின் சில முடிவுகளில் தலையீடாமல் இருக்கவேண்டிய மத்திய அரசு, திடீரென ரேபிட் டெஸ்ட் கருவியை மாநிலங்கள் நேரடியாக வாங்க தடை விதித்தது.

அதுமட்டுமின்றி, மத்திய அரசு சார்பில் 10 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்க இருப்பதாகவும், அப்படி வாங்கிய பிறகுதான் கருவிகளில்தான் தமிழகத்துக்கு பிரித்து தரப்படும் என்றும் கூறியுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில், அனைத்து மாநிலங்களும் மிகக் கடுமையான நெருக்கடிகளுக்கு உள்ளாகி வருகின்றன.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை மாநில அரசுகள் நேரடியாக கொள்முதல் செய்ய கூடாது என்று மத்திய பா.ஜ.க அரசு தடை விதித்திருப்பது கண்டனத்துக்கு உரியது.

அரசியல் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் உள்ள மாநில அதிகாரங்கள் பட்டியலில், பொது சுகாதாரம் மக்கள் நல்வாழ்வு என்பவை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின்கீழ் வருகிறது. கொரோனா தொற்று நோய் பாதிப்புகள் போன்ற சில அசாதாரணமான சூழ்நிலை ஏற்படும்போது மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று பொதுப்பட்டியலில் அதிகாரம் 29 இல் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் மாநில அரசுகள் தான் மக்களிடையே நேரடியாக இறங்கி பணியாற்றும் கடமையையும் பொறுப்பையும் பெற்றிருக்கின்றன.

கொரோனா பரவலைத் தடுக்கத் தேவையான பாதுகாப்புச் சாதனங்கள், முகக் கவசங்கள், கை உறைகள் மற்றும் வென்டிலேட்டர்கள் உள்ளிட்டவற்றை மத்திய அரசுதான் கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்கும் என்று எதேச்சாதிகாரமாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும்” என தெரிவித்துள்ளார்

Also Read: “மத்திய அரசின் வழிப்பறிக் கொள்ளை” : ஊர் அடங்கலாம் - நம் உள்ளம் அடங்கலாமா? - ஆழி செந்தில்நாதன்