India

போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் : மாநிலங்களவையில் தி.மு.க-வின் பலம் 7 ஆக உயர்வு!

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழகத்திலிருந்து தி.மு.க மற்றும் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட 6 உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே, அந்த இடங்களை பூர்த்தி செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

கடந்த மார்ச் 6ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன. தி.மு.க சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோரும் அ.தி.மு.க சார்பில் தம்பிதுரை, கே.பி.முனுசாமி, ஜி.கே.வாசன் ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர்.

இவர்கள் தவிர 3 சுயேட்சைகளும் மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், கடந்த மார்ச் 16ம் தேதியன்று தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை செயலாளர் அறையில், வேட்பு மனுக்களை பரிசீலிக்கப்பட்டு, 10 எம்.எல்.ஏக்கள் முன்மொழியாத சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இதனையடுத்து, வேட்பு மனுவை வாபஸ் பெறும் நேரம் முடிவடைந்ததையடுத்து, தி.மு.க மற்றும் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட 6 உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க உறுப்பினர்கள் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோருக்கு சட்டப்பேரவை செயலாளர் செல்வராஜ் சான்றிதழ் வழங்கினார்.

அப்போது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், காங்கிரஸ் மூத்த தலைவர் கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அபுபக்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மாநிலங்களவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழைப் பெற்ற தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர்கள் மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து தமிழகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பணியாற்றுவோரில் தி.மு.க-வைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

Also Read: "எஸ்.சி.எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு கண்காணிப்பு கூட்டத்தை ஒருமுறை கூர கூட்டாத எடப்பாடி" - கனிமொழி விளாசல்!