India

‘ஜன்னல் வழியாக தந்தையின் சடலத்தைப் பார்த்தேன்..’ : கொரோனா வைரஸ் பாதித்த இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளுக்குச் சென்றுவிட்டு திரும்புபவர்களில் கொரோனா தொற்று அறிகுறி இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்கள் அந்தந்த மாநிலங்களில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். அவர்கள் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

கேரள மாநிலம் தொடுப்புழா பகுதியில் ஆலகோடு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கத்தாரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் அண்மையில் கேரளாவுக்கு திரும்பினார். அப்போது கொரோனா பாதிப்பு அறிகுறிகள் இருப்பதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இந்த நிலையில் அந்த நபர் ஒரு உருக்கமான பதிவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது :

“கடந்த 7-ஆம் தேதி அவசரமாக தொடர்பு கொள்ளுமாறு கத்தாரில் இருந்த எனக்கு எனது சகோதரரிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது. இதையடுத்து அவரை நான் தொடர்புகொண்டேன். அப்போதுதான் தூங்கும்போது எனது தந்தை மெத்தையிலிருந்து கீழே விழுந்தது தெரியவந்தது. அவருக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு உள்புறம் ரத்தக் கசிவு இருந்து வருவதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. அலுவலகத்தில் தகவல் தெரிவித்துவிட்டு விமானம் மூலம் கேரளாவுக்கு வந்தேன். கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு செய்திகளை அறிந்தபோது வீட்டுக்குச் செல்வது குறித்து கவலை அடைந்தேன். இதையடுத்து எனக்கு கொச்சி விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது எனக்கு எந்தவித அறிகுறிகளும் ஏற்படாததால் சொந்த ஊர் செல்ல என்னை அனுமதித்தனர்.

கோட்டயம் சென்றேன். அங்கு தந்தை அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு சென்றபோது உறவினர்களுடன் நேரடியாக தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்ற முடிவுக்கு வந்தேன். இதையடுத்து எனக்கு திடீரென இருமலும் தொண்டையில் எரிச்சலும் இருந்தது. ஆரம்பத்தில் நான் பொருட்படுத்தவில்லை. எனினும் எனது உறவினர்களின் பாதுகாப்பிற்காக கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்களைச் சந்தித்தேன். நான் கத்தாரில் இருந்து வந்ததையும் கூறினேன். இதையடுத்து என்னை தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதித்தனர்.

கடந்த 9-ஆம் தேதி எனக்கு ஒரு அதிர்ச்சி செய்தி கிடைத்தது. அதில் எனது தந்தைக்கு பக்கவாதம் வந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார் என எனது குடும்பத்தினர் தெரிவித்தனர். நானும் எனது தந்தையும் ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் என்னால் என் தந்தையை ஒரு முறை கூட பார்க்க முடியவில்லை, அழுவதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியவில்லை.

எனது தந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டபோது தனிமைப்படுத்தப்பட்ட வார்டின் ஜன்னல் வழியாக என் தந்தையின் சடலத்தைப் பார்த்தேன். எனது தந்தையின் உடல் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட போது வீடியோ கால் மூலம் அவரது முகத்தை ஒரு முறை பார்த்தேன். எனது தந்தையின் ஈமச்சடங்கில் கூட என்னால் கலந்துகொள்ள முடியவில்லை.

ஒருவேளை இரத்தப் பரிசோதனையில் எனக்கு கொரோனா இல்லை என முடிவுகள் வந்தால் நான் நிச்சயம் வருத்தப்படுவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். அவருடைய இந்த சோகமான பதிவு இணையத்தில் பரவிவருகிறது.

Also Read: “கொரோனா விடுமுறை நாட்களிலும் வீடுகளுக்கே செல்லும் மதிய உணவு” - கேரளாவில் பினராயி விஜயன் அசத்தல்!