India

கி.மீட்டருக்கு 1 பைசா முதல் 4 பைசா வரை அதிகரித்த பயணிகள் ரயில் கட்டணம் - மோடி அரசின் புத்தாண்டு பரிசா?

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததில் இருந்தே பொதுத்துறை நிறுவனங்களை பாழ்படுத்தும் நடவடிக்கையைத் தொடர்ந்து வருகின்றது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையில் ஏராளமான மக்கள் தினமும் பயணம் செய்து வருகின்றனர். இந்தச் சூழலில் சாதாரண நடுத்தர மக்களின் பயணங்களைச் சிதைக்கும் வேலையில் தற்போது மத்திய அரசு இறங்கியுள்ளது.

கடந்தகாலம் முதலே ரயில்வே துறை நஷ்டத்தில் இயங்கி வந்ததாக கணக்கு காட்டிய மத்திய அரசு, தற்போது அதனை சாதகமாகப் பயன்படுத்தி பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. பயணிகள் ரயில் டிக்கெட் கட்டணம் புத்தாண்டு நள்ளிரவு முதல் திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2014-15 நிதியாண்டில் 7வது சம்பள கமிஷன், பயணிகள் வசதி மேம்படுத்துதல் போன்ற காரணங்களை காட்டி பயணிகள் கட்டணத்தை மோடி அரசு உயர்த்தியது. இருப்பினும் ரயில்வேக்கு வரவை விட செலவுதான் அதிகமாக உள்ளது என மத்திய கணக்கு தணிக்கை குழு தெரிவித்ததையடுத்து, ரயில் கட்டணங்களை உயர்த்த பிரதமர் அலுவலகம் கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது.

அதனையடுத்து இந்திய ரயில்வே புதிய கட்டணம் தொடர்பான விவரங்களை நேற்று அறிவித்தது. அதில், கிலோ மீட்டருக்கு ஒரு காசு முதல் 4 காசு வரை உயர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சாதாரண ஏசி அல்லாத ரயில்களில் 2ம் வகுப்பு உட்காரும் வசதி, 2ம் வகுப்பு தூங்கும் வசதி, சாதாரண முதல் வகுப்பு டிக்கெட்கள் கிலோ மீட்டருக்கு 1 காசு உயர்த்தப்படுகிறது.

அதேபோல், ஏசி அல்லாத மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் 2ம் வகுப்பு உட்காரும் வசதி, 2ம் வகுப்பு தூங்கும் வசதி, முதல் வகுப்பு டிக்கெட்களுக்கு கிலோ மீட்டருக்கு 2 காசு உயர்த்தப்படுகிறது. ஏசி சேர் கார் (உட்காரும் வசதி), ஏசி 3ம் வகுப்பு, ஏசி 2ம் வகுப்பு, ஏசி முதல் வகுப்பு, எக்ஸிகியூடிவ் வகுப்பு டிக்கெட்களுக்கு கிலோ மீட்டருக்கு 4 காசு உயர்த்தப்படுகிறது.

மேலும், புறநகர் ரயில் டிக்கெட் கட்டணத்தில் மாற்றம் இல்லை. புறநகர் ரயில்களில் சீசன் டிக்கெட் கட்டணங்கள் மாற்றமில்லை. புதிய கட்டண உயர்வு இன்று முதல் (நேற்று நள்ளிரவில் இருந்து) அமலுக்கு வந்துள்ளது. மக்களை வேதனைக்குள்ளாக்கும் மோடி அரசின் புத்தாண்டு பரிசான இந்த திடீர் கட்டண உயர்வு பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இந்தியாவின் முதல் தனியார் ரயிலில் வசூலிக்கப்படும் கட்டணம் எவ்வளவு தெரியுமா? - குமுறும் பொதுமக்கள்!