India

“கோடிக்கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்ட இந்தியாவுக்கு இந்த நிலையா?” - சர்வதேச நாணய நிதியம் அதிர்ச்சி!

நாட்டின் பொருளாதாரம் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதலபாதாளத்திற்குச் சென்றுள்ளது. இதனால், இந்தியாவின் தொழில்துறையும் ஏற்றுமதி, இறக்குமதியும் அழிவு நிலையை எட்டியுள்ளன.

மேலும், கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் வளர்ச்சி 4.2 சதவிகிதமாக குறைந்துள்ளது. தொழில்துறை வளர்ச்சி மிகுந்த நெருக்கடியில் உள்ளது. ஆட்டோமொபைல், கட்டுமானம், மின் உற்பத்தி உள்ளிட்ட பல துறைகள் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.

இந்தியாவின் பொருளாதாரம் இந்த அளவுக்கு மோசமான நெருக்கடியை சந்தித்து வரும் நிலையிலும் பா.ஜ.க அரசு வெறுப்பரசியலை நடத்தி வருகிறது என எதிர்க்கட்சிகள், அரசியல் நோக்கர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய பொருளாதார நிலை குறித்து சர்வதேச நாணய நிதியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களுக்கான போதிய பணம் இந்திய அரசிடம் இல்லை எனவும், அதிகரித்து வரும் கடன் சுமை மற்றும் வட்டியால் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்த வாய்ப்பில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

கோடிக்கணக்கான மக்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்டெடுத்த இந்தியா தற்போது மோசமான பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது. ஆகவே, இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதற்கும், வளர்ச்சி பாதைக்கு திரும்புவதற்கும் அவசர கால நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் அறிவுறுத்தியுள்ளது.

கீதா கோபிநாத்

இது தொடர்பாக பிரதமர் மோடியை அண்மையில் சந்தித்துப் பேசியுள்ளார் சர்வதேச நாணய நிதியத்தின் ஆராய்ச்சித் துறை இயக்குநர் கீதா கோபிநாத். அப்போது உலக அளவிலான வளர்ச்சியைப் பெறுவதற்கு கல்வி மற்றும் சுகாதாரத்துறையை மேம்படுத்துவது அத்தியாவசியமானது. ஆனால், இந்தியாவின் பொருளாதார மந்தநிலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறியுள்ளார்.

Also Read: “ஐ.சி.யூவில் உள்ளது நாட்டின் பொருளாதாரம்” - முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் எச்சரிக்கை!