India

“தேச நலனுக்கு ஒப்பாத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது பா.ஜ.க அரசு” - திருமாவளவன் கண்டனம்!

குடியுரிமை மசோதாவுக்கு எதிராக வட மாநிலங்களில் நடைபெற்று வரும் போராட்டங்களைப் போன்று, தமிழகத்திலும் வலுவான போராட்டத்தை நடத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் ஆலோசனை செய்து அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என்று வி.சி.க தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “பாசிச அரசியலை பா.ஜ.க மேற்கொண்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ்-ஸின் நீண்ட கால கனவு திட்டங்களை தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒவ்வொன்றாகச் செய்துவருகிறது பா.ஜ.க அரசு.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தனர். அவர்களின் நீண்டகால கனவான ராமர் கோவில் கட்டுவதை அயோத்தி தீர்ப்பு மூலம் நிறைவேற்றினர். அதன் தொடர்ச்சியாக இஸ்லாமியர்கள், ஈழத் தமிழர்களைப் புறக்கணிக்கும் வகையில் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளனர். மக்கள் விரும்பாத இந்த மசோதாவை, அவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி இரண்டு அவைகளிலும் நிறைவேற்றி உள்ளனர்” எனக் குற்றம்சாட்டினார் திருமாவளவன்.

மேலும், குறிப்பிட்ட வருடங்களில் மட்டும் வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் மட்டும் குடியுரிமை வழங்குவது என்பது, மதத்தை, நாட்டை கூறுபோடும் செயலாகும் என்று கூறிய அவர், மத்தியில் இன்னும் 4 ஆண்டுகள் தாங்கள்தான் ஆட்சியில் இருப்போம் என்று மக்களவையில் பேசும் போக்கை வி.சி.க வன்மையாக கண்டிக்கிறது என்றும், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக, தேசத்திற்கு ஒப்பாத வகையில் நடைபெறும் நடவடிக்கைகள் இவை என்றார்.

எனவே ஜனநாயகக் கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி தேசத்தைக் காக்க வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகள் தனித் தனியே போராட்டம் நடத்தினாலும் ஒன்றிணைந்து போராட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி வட மாநிலங்களில் நடைபெறுவதைப் போன்று வலுவான போராட்டம் தமிழகத்தில் நடைபெற வேண்டும். இது தொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மாநிலங்களவையில் அ.தி.மு.க இந்த மசோதாவை எதிர்த்து வாக்களித்திருந்தால் குடியுரிமை மசோதா நிறைவேறாமல் இருந்திருக்கும் என்று கூறினார். எனவே அ.தி.மு.க தன் நிலைப்பாட்டை பரிசீலனை செய்யவேண்டும் என்றும் இது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு செய்யும் துரோகம் என்பதை அவர்களுக்கு சுட்டிக்காட்டுவதாகவும் கூறியுள்ளார்.

Also Read: '’மோடிக்கு பயந்து குடியுரிமை சட்டத்தை ஆதரித்துள்ளது அ.தி.மு.க கூட்டணி’ - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!