India

வெங்காயம் வாங்க வரிசையில் நின்றவர் மாரடைப்பால் மரணம் : ஆந்திராவில் துயரச் சம்பவம்!

தங்கம் விலையைப் போன்று நாளுக்கு நாள் வெங்காயத்தின் விலையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் மக்களும், வணிகர்களும் படாதபாடு படுகின்றனர். வெங்காய விலை உயர்வு குறித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ் பறந்து வருகின்றன.

தமிழகத்தில் மட்டும் கிலோ ஒன்றுக்கு 200 ரூபாய் வரை வெங்காயம் விற்கப்படுகிறது. அதேபோல் வட மாநிலங்களில் விண்ணை முட்டும் அளவுக்கு வெங்காயம் விற்கப்பட்டு வருகிறது.

இந்த பிரச்னையில் அரசு தரப்பிலும் எந்த வித நடவடிக்கையும் எடுத்தப்பாடில்லை. அரசின் அலட்சிய தன்மையைச் சுட்டிக்காட்டி தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

Also Read: மலிவு விலையில் வெங்காயம் வாங்க முட்டி மோதிய கூட்டம்! (வைரல் வீடியோ)

ஆனால், ஆந்திராவில் 95 ரூபாய்க்கு விற்கப்படும் வெங்காயம் அரசின் உழவர் சந்தையில் கிலோ ஒன்று 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனையடுத்து மக்கள் முட்டி மோதி வெங்காயத்தை வாங்கிச் செல்கின்றனர்.

இந்நிலையில், கிருஷ்ணா மாவட்டம் குடிவாடா பகுதியில் உள்ள உழவர் சந்தையில் வெகுநேரமாக வெங்காயம் வாங்குவதற்கு வரிசையில் நின்ற சாம்பையா (65) என்ற நபருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

அதனையடுத்து மயங்கி விழுந்த அந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். வெங்காயம் வாங்க வரிசையில் நின்று உயிரிழந்த செய்தியை அறிந்த அப்பகுதி மக்கள் கவலைக்குள்ளாகினர்.