India

சாமானியர்கள் இருக்கட்டும்; குடியரசுத் தலைவர் மாளிகை கூட திருடர்களின் கைவரிசையிலிருந்து தப்பிக்காத சோகம்!

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் பொருத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய்கள் திடீரென திருடுபோனது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜோர் பாக் பகுதியில் இருந்து ராஷ்டிரபதி பவனுக்கு தண்ணீர் குழாய் பதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அங்கு வைக்கப்பட்டிருந்த இரண்டு குழாய்களைக் காணவில்லை என ஒப்பந்ததாரர்கள் சாணக்கியபுரி போலிஸாரிடம் புகார் அளித்தனர்.

இதனையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது, மர்ம நபர்கள் சிலர் அப்பகுதியில் நடமாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற பின்னரே அங்கு குடிநீர் குழாய்கள் மாயமாகியிருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, மர்ம நபர்கள் வந்த காரின் எண்ணை வைத்து, அதன் உரிமையாளர் அஜய் என்பவரை போலிஸார் கைது செய்து விசாரித்துள்ளனர். அவரளித்த தகவலின் அடிப்படையில் பீகாரை சேர்ந்த மிதிலேஷ், ஊபர் கார் டிரைவர் ராகேஷ் திவாரி, குட்டு கான் ஆகியோரை போலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து திருடு போன குடிநீர்க் குழாய்கள் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாகப் பேசிய டெல்லி போலிஸார், “ஜோர் பாக் பகுதியில் இருந்து ராஷ்டிரபதி பவனுக்கு தண்ணீர் குழாய் பதிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் பல குழாய்கள் கேட் 23 மற்றும் 24க்கு அருகே பொருத்தப்பட்டுள்ளன. ஒப்பந்த தொழிலாளர்கள் இந்த குழாய்களை பதிப்பதற்காக அங்கே வைத்திருக்கும்போது திருட்டு சம்பவம் நடந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.