India
மகாராஷ்டிரா முதல்வராகப் பதவியேற்றார் உத்தவ் தாக்கரே... துணை முதல்வர் பதவி யாருக்கும் இல்லையா?
மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று பதவியேற்றார். அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் குறைந்தபட்ச செயல்திட்டத்தின் கீழ் கூட்டணி அமைத்துள்ளன. பலகட்ட அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் மும்பையிலுள்ள சிவாஜி பூங்காவில் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்கும் விழா நடைபெற்றது.
உத்தவ் தாக்கரே பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ளும்படி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங். தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அழைப்பை ஏற்று மகாராஷ்டிர முதல்வரின் பதவியேற்பு விழாவில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார்.
தேசியவாத காங். தலைவர் சரத் பவார், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது பட்டேல், பா.ஜ.க தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இன்று மாலை 6.40 மணிக்கு உத்தவ் தாக்கரேவுக்கு அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அவரைத் தொடர்ந்து, சிவசேனாவைச் சேர்ந்த ஏக்நாத் முண்டே, சுபாஷ் தேசாய், தேசியவாத காங்கிரஸின் ஜெயந்த் பட்டீல், சந்திரகாந்த் புஜ்பால், காங்கிரஸ் கட்சியின் பால்சாகேப் தோரட், நிதின் ராவத் ஆகிய 6 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
மகாராஷ்டிராவில் அமையவிருக்கும் கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் எனக் கூறப்பட்டது. ஆனால், இன்றைய பதவியேற்பு விழாவில் துணை முதல்வராக யாரும் பதவியேற்காததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சிவசேனாவின் சார்பில் ஏற்கனவே மனோஹர் ஜோஷி, நாராயண் ரானே ஆகியோர் முதல்வர்களாகப் பதவி வகித்துள்ளனர். சிவசேனாவின் மூன்றாவது முதல்வராக இன்று பதவியேற்றுள்ளார் உத்தவ் தாக்கரே.
Also Read
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!