இந்தியா

“தாக்கரே குடும்பத்திலிருந்து முதல் முதலமைச்சர்” - கட்சியைக் காப்பாற்ற அரியணை ஏறிய உத்தவ் தாக்கரே!

50 ஆண்டுகால சிவசேனா வரலாற்றில் தாக்கரே குடும்பத்திலிருந்து முதன்முதலாக அரியணை ஏறியிருக்கிறார் உத்தவ் தாக்கரே.

“தாக்கரே குடும்பத்திலிருந்து முதல் முதலமைச்சர்” - கட்சியைக் காப்பாற்ற அரியணை ஏறிய உத்தவ் தாக்கரே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சிவசேனா 1966ம் ஆண்டு அரசியல் அமைப்பாக உருவானது. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலைச் சந்தித்து வரும் சிவசேனா, மராட்டியர்களின் வாக்குகளைப் பெற்று அவர்களுக்கான அரசியலை செய்து வருகிறது. ஆனால் தாக்கரே குடும்பத்திலிருந்து இத்தனை காலம் யாரும் தேர்தலில் நின்றது இல்லை அரசியல் அதிகாரப் பதவிகளை எப்போதும் தேடிச்சென்றதில்லை.

மகாராஷ்டிராவில் சிவசேனா, தங்களுக்கென தனித்த இடத்தை உருவாக்கத் தொடங்கிய காலகட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் ஆதரவு அளித்து இருக்கிறதே தவிர நேரடியாக வாக்கு அரசியலில் இறங்கவில்லை. 1995-99 காலகட்டத்தில் தான் முதன்முதலில் சிவசேனா கட்சியின் முதல்வராக மனோஹர் ஜோஷியும், 1999 பிப்ரவரி முதல் அக்டோபர் வரை முதல்வராக நாராயண் ரானேவும் பதவி வகித்தனர். அதன் பின்னர் சிவசேனா ஆட்சிக்கு வரவே இல்லை. ஆட்சியைப் பிடிக்காமல் தாடியை எடுக்கமாட்டேன் என சபதமேற்றிருந்த பால் தாக்கரே 2012 வரை தாடியை எடுக்கவே இல்லை.

“தாக்கரே குடும்பத்திலிருந்து முதல் முதலமைச்சர்” - கட்சியைக் காப்பாற்ற அரியணை ஏறிய உத்தவ் தாக்கரே!

1960 ஆண்டு ஜூலை 27ம் தேதி மும்பையில் பிறந்தார் உத்தவ் தாக்கரே. முதல் 40 வருடங்கள் தனது தந்தையின் அரசியலை விட்டு தள்ளியே இருந்து வந்தார். அந்தக் காலகட்டத்தில் புகைப்படக் கலைஞர், எழுத்தாளர் எனச் செயல்பட்டு வந்தார். 2002ம் ஆண்டு உத்தவ் தாக்கரேவுக்கு ஒரு பலப்பரீட்சை வைத்தார் பால் தாக்கரே. அப்போது நடந்த மும்பை மாநகராட்சி தேர்தல் பொறுப்பு உத்தவ் தாக்கரேவிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் சிவசேனா 97 இடங்களைப் பிடித்து மிகப்பெரிய வெற்றிகண்டது.

2003ம் ஆண்டு சிவசேனாவின் செயல் தலைவராகவும், 2004ம் ஆண்டு தலைவராகவும் உத்தவ் தாக்கரே அறிவிக்கப்பட்டார். அதன் பின்னர் சிவசேனாவின் ‘சாம்னா’ பத்திரிகையின் பொறுப்பாளராக செயல்பட்டார். 2012ம் ஆண்டு மும்பை மாநகராட்சி தேர்தலில் சிறப்பாகப் பணியாற்றி சிவசேனாவுக்கு வெற்றி வாய்பைத் தேடித்தந்தார்.

“தாக்கரே குடும்பத்திலிருந்து முதல் முதலமைச்சர்” - கட்சியைக் காப்பாற்ற அரியணை ஏறிய உத்தவ் தாக்கரே!

சிவசேனாவின் மீதிருந்த வன்முறைக் கட்சி என்கிற பிம்பத்தை, மாநில மக்களின் நலனுக்காக செயல்படும் கட்சி என்று மாற்றிக்காட்டினார். 2012ம் ஆண்டு பால் தாக்கரே மறைவுக்குப் பின்னர் கட்சி முழுமையாக அவரது கட்டுப்பாட்டில் வந்தது. பின்னர் 2014 நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல், 2017 மும்பை மாநகராட்சி தேர்தல், 2019 நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றை சிவசேனாவை முன்வைத்து சந்தித்திருக்கிறார் உத்தவ் தாக்கரே.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க உடன் கூட்டணியிலிருந்த சிவசேனா 20 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதே ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் சிவசேனாவை விட அதிக இடங்கள் கேட்கவே, 30 ஆண்டுகால கூட்டணியை உடைக்கவும் தயங்கவில்லை உத்தவ் தாக்கரே. தேர்தல் முடிவில் 63 இடங்களைக் கைப்பற்றியது சிவசேனா. பா.ஜ.க-வுக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் பா.ஜ.க-வுக்கு ஆதரவளித்து அரசில் அங்கம் வகித்தது சிவசேனா. அதன் பின்னர் நடந்த 2017 மும்பை மாநகராட்சி தேர்தலில் 84 இடங்களை கைப்பற்றியது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க 25 இடங்களிலும் ,சிவசேனா 23 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இதில் பா.ஜ.க 23 , சிவசேனா 18 இடங்களை கைப்பற்றியது.

“தாக்கரே குடும்பத்திலிருந்து முதல் முதலமைச்சர்” - கட்சியைக் காப்பாற்ற அரியணை ஏறிய உத்தவ் தாக்கரே!

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து 6 மாதங்களில் சட்டப்பேரவை தேர்தலைச் சந்தித்தது மகாராஷ்டிரா. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க சிவசேனாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அதற்கு முக்கிய உதாரணம் எப்போதும் பா.ஜ.கவை விட அதிக இடங்களில் போட்டியிடும் சிவசேனா 124 இடங்களிலும் பா.ஜ.க அதைவிட அதிகமாக 152 இடங்களிலும் போட்டியிட்டது. இதில் பா.ஜ.க 122 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றது. இரண்டு கட்சிகள் இணைத்து ஆட்சி அமைக்கும் என்று நினைத்திருந்த நிலையில் உத்தவ் தாக்கரே 'முதல்வர்' பதவியுடன் ஆட்சியில் சமபங்கு கேட்கவே பா.ஜ.க தரமறுத்தது.

சிவசேனா தொடங்கப்பட்ட காலத்திலிருந்து, தாக்கரே குடும்ப உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட்டதும் இல்லை; அரசதிகார பதவிகளில் இருந்ததும் இல்லை. பால் தாக்கரே நினைத்திருந்தால் எப்போதோ அவர் முதல்வராக அரியணை ஏறி இருக்கலாம். ஆனால் யார் முதல்வர் பதவியில் இருந்தாலும் ‘ரிமோட் கன்ட்ரோலை’ தங்களிடம் வைத்திருந்தனர். 15 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இல்லாமலேயே பால் தாக்கரே மறைந்தார்.

“தாக்கரே குடும்பத்திலிருந்து முதல் முதலமைச்சர்” - கட்சியைக் காப்பாற்ற அரியணை ஏறிய உத்தவ் தாக்கரே!

சிவசேனாவிலிருந்து அடுத்த முதல்வர் வரவேண்டும் என்று சத்தியம் செய்ததாக உத்தவ் தாக்கரே அண்மையில் பேட்டியில் சொல்லியிருந்தார். பா.ஜ.க தங்களை அழித்து வளர்ந்து வருவதை உணர்ந்த உத்தவ் தாக்ரே இதற்கு மேல் விட்டால் சிவசேனா இடம் தெரியாமல் அழிந்துவிடும் என்பதை உணர்ந்தே முதல்வர் பதவியை தரும்படி வலியுறுத்தி, ஆட்சி அமைக்க முட்டுக்கட்டை போட்டார்.

இந்தத் தேர்தலில் ஆதித்ய தாக்கரேவை சிவசேனா களமிறக்கி வெற்றியும் கண்டது. ஆனால் பா.ஜ.க முதல்வர் பதவியைத் தர மறுக்கவே, உத்தவ் தாக்கரே பா.ஜ.க கூட்டணியை விட்டு வெளியேறினார். தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணியில் உடன் இணைந்து உத்தவ் தாக்கரே சிவசேனாவை காப்பாற்ற முதல்வர் பதவியையும் அடைந்திருக்கிறார். இப்போது பால் தாக்கரே இருந்திருந்தால் பல ஆண்டுகாலமாக வளர்த்து வந்த தாடியை எடுத்துவிட்டு தனக்குப் பிடித்த சிவாஜி மைதானத்தில் அமர்ந்து மோடி-அமித்ஷாவிற்கு சவால் விட்டிருப்பார்.

- சி.ஜீவா பாரதி

banner

Related Stories

Related Stories