India
மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி? - மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை எதிர்த்து சிவசேனா வழக்கு!
மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை பரிந்துரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றும் சிவசேனாவுடனான அதிகாரப் பகிர்வு மோதலால் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
சிவசேனா கட்சி 50 : 50 அதிகாரப் பகிர்வில் விடாப்பிடியாக இருப்பதால் ஆட்சி அமைப்பதில் இழுபறி உருவானது. 105 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பா.ஜ.க-விடம் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்த நிலையில் அதைத் தவிர்த்தது பா.ஜ.க.
இதையடுத்து, 56 இடங்களில் வெற்றி பெற்ற சிவசேனாவை நேற்று முன்தினம் ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். ஆட்சி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கிய சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவை நாடியது.
ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க விருப்பம் தெரிவித்த சிவசேனா, ஆதரவு கடிதங்களை அளிக்க 3 நாட்கள் அவகாசம் கேட்டது. அதற்குள் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளை கூட்டணிக்குள் சேர்த்துவிடலாம் எனக் கணக்குப் போட்டது சிவசேனா. ஆனால், ஆளுநர் அவகாசம் அளிக்க மறுத்துவிட்டார்.
பின்னர் மூன்றாவது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியமைப்பது குறித்து இன்று இரவு 8:30 மணிக்குள் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினார் ஆளுநர். இதனால், சிவசேனா - காங்கிரஸ் உடன் தீவிரமாக ஆலோசித்து வருகிறார் சரத் பவார்.
இதற்கிடையே, மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் பதவிக் காலம் ஏற்கெனவே முடிந்துவிட்டதால் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துமாறு மத்திய அமைச்சரவை பரிந்துரைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஆட்சியமைக்க ஆளுநர் அவகாசம் தரவில்லை என சிவசேனா சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இதனால், மகாராஷ்டிரா அரசியல் களத்தில் அடுத்து நிகழும் என்பதில் குழப்பம் அதிகரித்துள்ளது.
Also Read
-
“‘தான் திருடி, பிறரை நம்பார்’ என்பதைப் போன்றவர்தான் எடப்பாடி பழனிசாமி!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தை கண்டு ஒப்பாரி ஓலமிடும் பழனிசாமி : அமைச்சர் ரகுபதிக்கு பதிலடி!
-
திண்டுக்கல் மாவட்டத்தில் 2,62,864 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்!
-
“நீங்கள் மற்றவர்களுக்கு Inspire ஆக இருக்க வேண்டும்”: மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000! : நாளை (ஜன.8) தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!