India
தொடங்கியது வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்: முடங்கியது வங்கி சேவை - பணப்பரிமாற்றம் செய்யமுடியாமல் மக்கள் தவிப்பு
வங்கிகள் இணைப்பு, வங்கிகள் தனியார்மயமாக்கலை எதிர்த்து இன்று (அக்டோபர் 22) அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வங்கிகள் இணைப்பு நடவடிக்கையால் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த வங்கிகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. வாராக்கடன் மட்டும் ஏறத்தாழ 3 லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு உள்ளது. இந்த நிலையில், மத்திய அரசின் வங்கிகள் இணைக்கும் நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், வங்கிகள் இணைப்பைக் கைவிட்டு வாராக் கடனை வசூலிப்பதில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வங்கி ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில் வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை எதிர்த்தும், வங்கிகளை முழுக்க முழுக்க தனியார் மயமாக்கும் மத்திய பா.ஜ.க அரசின் இந்த செயலை கண்டித்தும் அகில இந்திய அளவில், அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் மற்றும் இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் இன்று (அக்டோபர் 22) நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீபாவளி சமயத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பணப்பரிவர்த்தனை போன்ற பல்வேறு வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இது வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு அவதியளிக்கக் கூடியதாக உள்ளது. அரசு, வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, மக்களுக்கு வங்கி சேவை வழங்க உத்தரவாதம் அளிக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இது தொடர்பாக சென்னை பாரிமுனை அருகே உள்ள நாயக் பவனில் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம், “ 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக மாற்றியமைத்து 6 வங்கிகளை மூடுவதால் எந்த நன்மையும் ஏற்பட்டு விடாது. இதனால் லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை வாய்ப்பை இழப்பதோடு, மக்கள் பணத்தின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும்” என்றார்.
“வங்கிகளை இணைப்பதின் மூலம் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதுதான் மத்திய அரசின் அடுத்த திட்டம்” என பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.
Also Read
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!
-
“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!