India

“இந்திய பொருளாதாரத்தில் உள்ள பிரச்னைகளை தீருங்கள்” : மோடி அரசுக்கு ஐ.எம்.எப் நிர்வாக இயக்குநர் அறிவுரை!

இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு காரணமாக ஆட்டோமொபைல், உணவு உற்பத்தி உள்ளிட்ட நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் பங்குச்சந்தை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. அதனால் அந்நிய முதலீட்டாளர்கள் தங்களின் முதலீடுகளை திரும்பப் பெறுகின்றனர். குறிப்பாக உலக அளவில் பொருளாதார போட்டித்திறன் குறியீட்டில் இந்தியா முன்பு இருந்த இடத்தில் இருந்து 10 இடங்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக உலக பொருளாதாரக் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்று உலக வங்கி தனது ஆய்வறிக்கையில் தெரிவித்தது. அதில் இந்தியா, வங்கதேசம், நேபாளத்தைவிட பின்தங்கியுள்ளது. இந்திய பொருளாதாரத்துக்கு பெரும் ஆபத்து உள்ளது என சமீபத்தில் எச்சரித்திருந்தது.

கிறிஸ்டாலினா ஜார்ஜிவா

இதனையடுத்து, சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “2018-19 நிதியாண்டுக்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) 6.1 சதவீதமாக இருக்கும்” என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து ஐ.எம்.எப் அமைப்பின் மேலாண் இயக்குநர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா தெரிவித்திருப்பதாவது, “இந்தியாவில் உள்ள சில முக்கிய பிரச்னைகளை அடையாளம் கண்டு தீர்வுகாணவேண்டும்.

குறிப்பாக, நிதித்துறையில் வங்கி அல்லாத நிறுவனங்களை வங்கியுடன் ஒருங்கிணைக்கவேண்டும். அப்போது அதில் உள்ள பிரச்னைகள் தீர்க்கப்படவேண்டும். மேலும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் நீண்ட காரணிகளில் ஏற்படும் பிரச்னைகளை கண்டறிந்து அதை தீர்க்கும் நடவடிக்கையில் செயல்படவேண்டும்.

மிக முக்கியமாக மக்கள் வளம் மீது முதலீடு செய்வதற்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். அதுமட்டுமின்றி, இந்தியாவில் திறன்மிக்க புத்திசாலி பெண்கள் இருக்கிறார்கள்; அவர்கள் வீட்டிலேயே முடக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை அதிக அளவில் பணியாற்றச் செய்தல் அவசியம்.

மேலும், மற்ற நாடுகளைப் போல இந்தியாவும் பொருளாதார வளர்ச்சிக் குறைவைச் சந்தித்து வருகிறது. இருந்தாலும் பொருளாதார வளர்ச்சி தற்போது உள்ள 6 சதவீத வளர்ச்சியில் இருந்து சற்று அதிகமாகும் என எதிர்பார்க்கிறோம். அதுமட்டுமல்லாமல் கட்டமைப்பு வளர்ச்சி ரீதியான சீர்திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.