தமிழ்நாடு

100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!

கிராமப்புற ஏழைகளை வஞ்சிக்கும் பாஜகவிற்கும் அதனை ஆதரிக்கும் அடிமைகளுக்கும் மக்கள் வாக்குச்சாவடியில் பதில் தருவார்கள்!

100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வறுமை ஒழிப்புத் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தையே முடக்க பார்க்கிறது ஒன்றிய அரசு என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) பெயரை விக்‌ஷித் பாரத் – ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிசன் என்று ஒன்றிய பாஜக அரசு மாற்றப் போவதாகவும் அதற்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டிருப்பதாகவும், அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்ய சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய பாஜக அரசு கொண்டு வர போகிறது. இதன்படி ஒவ்வொரு நிதியாண்டிலும் 125 நாட்கள் ஊதிய வேலைவாய்ப்பு, ஒன்றிய அரசு 60 சதவிகிதம் மாநிலங்கள் 40 சதவிகிதம் என நிதிப் பகிர்வு முறை, தினசரி ஊதியம் வாராந்திர அடிப்படையில் வழங்கல், விவசாயப் பருவத்தில் விவசாயத் தொழிலாளர்கள் கிடைப்பதை எளிதாக்கும் வகையில், ஒரு நிதியாண்டில் 60 நாட்களுக்கு வேலை வழங்கப்படாது போன்ற திருத்தங்கள் மேற்கொள்ளப் போகிறார்கள். இவை அத்தனையும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தையே முடக்கும் செயல்பாடுகள்.

“கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு. கிராம மக்கள் மேம்பட வேண்டும்’’ என்ற மகாத்மா காந்தியின் உன்னதக் கொள்கையைச் செயல் வடிவம் ஆக்கியது மன்மோகன் சிங் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம். திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான பிரதமர் மன்மோகன் ஆட்சியில் 2006-ல் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் 100 நாள் வேலைத் திட்டம் கொண்டு வரப்பட்டது.

கல்வி உரிமை, உணவு பாதுகாப்பு உரிமை, தகவல் அறியும் உரிமை என்ற வரிசையில் மக்களுக்கு உரிமையாக திமுக அங்க வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒன்றிய அரசு 2005-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டம் என்ற புரட்சிகரமான திட்டதையும் செயல்படுத்தியது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்ற 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் கோடிக்கணக்கான கிராம மக்கள் பயன் அடைந்து வந்தார்கள். கிராமப்புறத்தில் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் 18 வயது நிரம்பிய ஒருவருக்கு ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது சட்டப்படி உரிமையாக்கப்பட்டது.

இந்த வறுமை ஒழிப்பு திட்டத்தை மோடி அரசு அமைந்த பிறகு முடக்க ஆரம்பித்தார்கள். "காங்கிரஸ் கூட்டணி அரசின் தோல்வியின் அடையாளச் சின்னமாக தொடர விரும்புகிறேன்" என பிரதமர் மோடி கூறியபோதே திட்டத்தை சின்னாபின்னமாக்க ஒன்றிய பாஜக அரசு முடிவு செய்துவிட்டது என்பது அப்பட்டமாக தெரிந்துவிட்டது. திட்டத்துக்கு நிதி ஒதுக்குவதில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. 2021-2022-ல் 98,468 கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில் 2022 – 2023-ல் 73,000 கோடி ரூபாயும் 2023-2024-ல் 60 ஆயிரம் கோடி ரூபாயும் என ஆண்டுதோறும் நிதியைக் குறைத்தார்கள். 2023-2024-ல் ஒதுக்கப்பட்ட தொகையும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.198 சதவீதம்தான். இந்தப் பற்றாக்குறையால் ஆண்டுக்குச் சராசரியாக வெறும் 40 நாட்கள் வேலை மட்டுமே என்ற நிலை உருவானது. இதனால், கிராமப்புறத் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். 100 நாட்களுக்கு அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டுமென்றால் 2.72 லட்சம் கோடி ரூபாய் தேவை. ஆனால், அதற்குரிய நிதியை ஒதுக்காமல் மோடி அரசு கிராமப்புற ஏழைகளை வஞ்சித்தது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 100 நாட்கள் கிடைத்த வேலை, மோடி ஆட்சியில் 30 நாட்கள் கூட கிடைக்கவில்லை. 2021-ம் ஆண்டு முதல் 7.6 கோடி தொழிலாளர்களின் நூறு நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டப் பணி அட்டைகள் நீக்கப்பட்டன. எந்த நோக்கத்துக்காக 100 நாள் வேலைத் திட்டம் தொடங்கப்பட்டதோ, அதனையே மோடி அரசு படுகொலை செய்தது.

கொரோனா பேரிடரில் இந்தத் திட்டம்தான் கிராமப்புற மக்களைக் காப்பாற்றியது. கோடிக்கணக்கான மக்களைப் பட்டினி கொடுமையில் இருந்து பாதுகாத்தது. முதல் கொரோனா ஊரடங்கின் போது 11 கோடி மக்களுக்கு 100 நாள் வேலைத் திட்டம் வாழ்வாதாரமாக விளங்கியது.

மகாத்மா காந்தி மீதான ஒவ்வாமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் பிரதமர் மோடி. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்ற பெயரை மாற்றி, மகாத்மா காந்தியின் பெயரையே இருட்டடிப்பு செய்யச் சதி நடக்கிறது. மகாத்மா காந்தி பெயரையே அகற்றுவது பாஜகவின் வெறுப்பரசியலை வெளிச்சம்போட்டு காட்டுகிறது. ‘’காந்தி திரைப்படம் வந்த பிறகுதான் நாட்டு மக்களுக்கே காந்தியை பற்றி தெரிய வந்தது’’ என்று முன்பு திருவாய் மலர்ந்த மோடி, காந்தியின் பெயரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் இருந்து நீக்குவது பெரிய விஷயமாக தெரியாது.

100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!

மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2-ஆம் தேதியை மறக்கடிக்கும் வகையில் ‘ஸ்வச் பாரத்’ என்ற தூய்மை இந்தியா திட்டத்தைப் பிரதமர் மோடி கொண்டு வந்தார். மன்மோகன் சிங் ஆட்சியில் 2009-ல் தொடங்கப்பட்ட ’நிர்மல் பாரத் அபியான்’ என்ற திட்டத்தை, மேக் அப் போட்டு, ’ஸ்வச் பாரத்’ எனப் பெயர் மாற்றியது போல, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திலும் செய்ய முயல்கிறார்கள். மொத்தத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் திட்டம் என்கிற தோற்றத்தை மாற்றி, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் திட்டம் போலக் காட்டமைக்க முனைகிறார்கள். பாஜக ஒன்றியத்தில் 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி செய்தும் சொல்லிக் கொள்ளும்படியாக புதிய திட்டத்தை கொண்டு வந்ததில்லை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை எதிர்க்கட்சியாக இருந்தபோது எதிர்த்துவிட்டு, மறுபெயரிட்டு நடைமுறைப்படுத்தும் ’திருட்டு வேலையை’ செய்து மக்களை ஏமாற்றி வருகிறது.

’இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் இருக்கிறது’ என்றவர் மகாத்மா காந்தி. அவரது பெயர் தாங்கிய மாபெரும் திட்டம்தான், இந்தியக் கிராமங்கள் தோறும் இருந்த வறுமை நிலையையும் வேலையின்மையையும் கணிசமாகக் குறைத்து வருகிறது. அப்படிப்பட்ட ஒரு திட்டத்தின் பெயரை, மகாத்மா காந்தியின் மீதிருக்கும் வெறுப்பின் அடிப்படையில் மாற்றுவதற்குத் துணிந்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு.

தங்களுடைய தகிடுதத்தங்களை மறைப்பதற்காக வெளித் தோற்றத்திற்கு வேலை நாட்களை அதிகரிப்பு, நிதி ஒதுக்கீடு உயர்வு என்று தேன் தடவியிருக்கிறார்கள். ஆனால், வரும் காலங்களில் இந்த நாட்கள் படிப்படியாகக் குறைப்பார்கள். பண மதிப்பிழப்பு, கருப்புப் பணம் மீட்பு என மோடி அரசின் ஏமாற்று வசனங்கள் கடைசியில் என்ன ஆனது? என்பதை நாடறியும். அதே போல்தான் இந்தத் திட்டத்தையே முடக்கும் வேலையை சட்டத் திருத்தம் மூலம் செய்து வருகிறது. 100 நாள் வேலையை 125 நாட்களாக அதிகரிக்கிறோம் என்பதை ஊடக தலைப்புச் செய்திக்காக செய்துவிட்டு, வேலை பெறுவதை சட்டப்பூர்வமாக்கும் மக்களின் உரிமையையே பறிக்க ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.

விவசாயக் காலத்தில் பணியாட்கள் இருக்க வேண்டும் என்ற நோக்கில் குறைந்த கூலிக்கு உழைக்கும் மக்களை நிர்ப்பந்திக்கும் ஒரு சதியும் இதில் அடங்கி இருக்கிறது. விவசாயத்தில் முதலாளி - தொழிலாளி இடையே நிலவிவந்த முரண்பாட்டை 100 நாள் வேலை திட்டம் உடைத்தெறிந்ததால், பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக பாஜக ஒன்றிய அரசு கிராமப்புற தொழிலாளர்களை மீண்டும் பண்ணை அடிமைமுறைக்கு மாற்றும் வேலையை செய்கிறது. குறிப்பிட்ட வேலை செய்வதைவிட மாற்று வேலை செய்யலாம் என்ற தொழிலாளர்களின் விருப்புரிமை நசுக்குகிறது. அறுவடை காலங்களில் 60 நாட்கள் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கப்படாது என மாற்றம் செய்வது, வேளாண் பணி செய்யாதவர்களின் வாழ்வாதாரத்தைபாதிக்கும்.

ஒன்றிய அரசால் பரிந்துரைக்கப்படவுள்ள பன்முக வறுமைக் குறிகாட்டிகளின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று செய்திகள் வருகின்றன. வறுமைக் குறியீட்டை அளவீடாக நிர்ணயிக்கும் போது, அது தமிழ்நாடு போன்ற வறுமையை ஒழிக்க நியாயமாகப் போராடி வரும் மாநிலங்களை நேரடியாய் பாதிக்கும். மக்கள் தொகை குறைப்பில் தமிழ்நாடு செய்து காட்டிய சாதனை, நாடாளுமன்ற தொகுதிகள் குறைப்பு என்ற அநீதியை நம் மீது சுமத்தத் திட்டமிட்டிருக்கிறார்களோ அதே போல வறுமையை ஒழிப்பதற்கான தண்டனையாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மாற்றப்படும். புதிய திருத்தங்களால் தமிழ்நாட்டு மக்கள் பெரிய இழப்பைச் சந்திப்பார்கள்.

ஏற்கெனவே முறையற்ற GST நிதிப் பகிர்வு மூலம் தமிழ்நாட்டின் நிதியை ஒன்றிய பாஜக அரசு குறைந்தது. கல்வி நிதி, பேரிடர் நிதி, வளர்ச்சி நிதி என எந்த நிதியையும் முறையாக ஒதுக்காமல் தொடர்ந்து வஞ்சித்தார்கள். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்த மக்களுக்கு ஒதுக்க வேண்டிய 4,000 கோடி ரூபாய் நிதியை முறையாக ஒதுக்காமல் காலம் தாழ்த்தி ஏழைகள் வயிற்றில் அடிதத்து ஒன்றிய பாஜக அரசு. இப்போது மறைமுகமாக இந்தத் திட்டத்தில் இருந்து தமிழ்நாட்டு மக்களை வெளியேற்றும் முயற்சியைச் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால், 92 லட்சம் ஏழை எளிய கிராமப்புற மக்கள் குறிப்பாகக் கிராமப்புறப் பெண்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான நிதிப் பங்கீட்டிலும் மாற்றம் கொண்டுவரப் போகிறது ஒன்றிய அரசு. இதுவரை இருந்ததை மாற்றி, ஒன்றிய அரசு 60 சதவிகித நிதியையும், மாநில அரசு 40 சதவிகித நிதியையும் பங்களிக்க வேண்டும் என்று மாற்றப்படுகிறது. ஏற்கெனவே உரிய நிதியை வழங்காமல் இழுத்தடிக்கும், ஒன்றிய அரசு, இந்தத் திட்டத்துக்கான பெரும்பகுதி நிதியை மாநிலங்களின் தலையில் கட்டிவிட்டுத் தன்னை தற்காத்துக் கொள்ள முயல்கிறது. இந்த திட்டத்தை முற்றிலும் குழிதோண்டி புதைக்கும் வகையிலும் மாநில உரிமைகளை பறித்து, மாநில அரசின் மீது நிதிச்சுமையை ஏற்றும் வகையில் புதிய மசோதாவை ஒன்றிய பாஜக அரசு உருவாக்கியுள்ளது. சிறப்பாக செயல்படும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களை தண்டிப்பதை வழக்கமாக கொண்ட பாஜக, மீண்டும் ஒரு வஞ்சகத்தை துணிந்து செய்கிறது.

2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் ’100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் வேலை நாட்கள் 100-இல் இருந்து 150-ஆகவும், ஊதியம் 400 ரூபாயாகவும் உயர்த்தப்படும்’ என திமுக வாக்குறுதி அளித்தது. இந்த வாக்குறுதிக்கு பிறகுதான் தினசரி ஊதியத்தை உயர்த்தி வழங்கும் அறிவிப்பை மோடி அரசு வெளியிட்டது. நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், 100 நாள் வேலைத் திட்டத்திற்கான தினசரி ஊதியத்தை உயர்த்தி வழங்கும் அறிவிப்பை வெளியிட்டார்கள். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்குத் தினசரி ஊதியம் ரூ.294 ஆக இருந்தநிலையில், ரூ. 319ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள சூழலில் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அறிவிப்பை வெளியிட்டார்கள். வாக்குப்பதிவுக்குச் சில நாட்கள் இருக்கும் போதுதான் மக்கள் மீது மோடிக்குக் கரிசனம் ஏற்பட்டது. தேர்தல் முடிந்த பிறகு இந்தத் திட்டத்தில் தனது நயவஞ்சகத்தைக் காட்டிவிட்டார் பிரதமர் மோடி.

உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அதிக அளவிலான பணியாளர்கள் இந்தத் திட்டத்தில் இணைந்திருக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories