
2005ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில், ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஒரு நிதியாண்டில் 100 நாட்கள் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கிவிட்டு, "விக்ஸித் பாரத் ஜி ராம் ஜி" என ஒன்றிய அரசு மாற்றியுள்ளது. இதுவரை இத்திட்டத்திற்கான 100 சதவீத நிதியை ஒன்றிய அரசு வழங்கி வந்த நிலையில், தற்போது அதனை 60:40 ஆக ஒன்றிய அரசு மாற்றியுள்ளது.
அதாவது இந்த திட்டத்திற்கான நிதியில் 40 சதவீதத்தை மாநில அரசுகள் தான் வழங்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் மாநில அரசுகளுக்கு நிதிச்சுமை அதிகரிக்கும்.
இப்படி 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்தது. மசோதா தாக்கல் செய்யும் போதே இந்தியா கூட்டணி எம்.பிக்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

இந்த மசோதா மீது பேசிய மக்களவை தி.மு.க குழு தலைவர் டி.ஆர்.பாலு "ஏழைகளுக்கு பொருளாதார சுதந்திரம் வழங்க மகாத்மா காந்தி பெயரில் ஊரக வேலை வாய்ப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் காந்தி மீதான வெறுப்பால் அவரது பெயரை நீக்குகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு. மகாத்மாவின் பெயரை நீக்கி தேசத்தையே இழிவுபடுத்தியுள்ளது ஒன்றிய பா.ஜ.க அரசு" என தெரிவித்துள்ளார்.
அதேபோல் காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி, "100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி அவரை அவமதித்துள்ளது மோடி அரசு. அதோடு,மாநில அதிகாரங்களை குறைத்து, அதிகார குவிப்பில் ஈடுபடுகிறது ஒன்றிய அரசு. இத்திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அரசு 40% குறைத்துள்ளது." என கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மகாத்மா காந்தியின் புகைப்படத்தை கையில் ஏந்தி நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.






