India
“பிஎம்சி வங்கியில் சிகிச்சைக்கு பணம் எடுக்கமுடியவில்லை”: போராட்டத்தின்போது மாரடைப்பால் வாடிக்கையாளர் பலி!
பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி இந்தியாவில் செயல்படும் சிறந்த கூட்டுறவு வங்கியாக இருந்தது. ஆனால் கடந்த 6 மாதங்களில் இந்த வங்கி கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, வாராக்கடன் மதிப்பு 4,300 கோடி ரூபாயாக மாறியுள்ளது. அதனால் இந்த வங்கியின் நிர்வாகத் திறனை சரி செய்ய ரிசர்வ் வங்கி கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.
அதாவது, வாடிக்கையாளர்கள் அடுத்த 6 மாதத்திற்கு அதிகபட்சமாக ரூபாய் 1,000 மட்டுமே எடுக்கமுடியும் என உத்தரவிடப்பட்டு பின்னர் 25,000 ஆக அதிகரிக்கப்பட்டது. அதேபோல, புதிதாக எந்தக் கடனும் வழங்கக் கூடாது, டெபாசிட்களும் போடக்கூடாது எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
பின்னர், பி.எம்.சி வங்கியில் இருந்து வீட்டு வசதி மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனமான எச்.டி.ஐ.எல் சுமார் 2,500 கோடி ரூபாய் கடன் பெற்றதும், அதில் முறைகேடுகள் நடந்துள்ளதும் அம்பலமானது.
இதனால் வங்கியில் சேமிப்புக் கணக்கு மூலம் பணம் எடுத்து தொழில் செய்துவந்தவர்கள் கடும் சிரமம் அடைந்தனர். இதன் மூலம் பி.எம்.சி கூட்டுறவு வங்கி மீளமுடியாத அளவிற்கு கடந்த மூன்று வாரத்தில் முடங்கியுள்ளது. இந்த வங்கியை நம்பி டெபசிட் செய்தவர்களும் மருத்துவ தேவை உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளைத் தீர்க்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், எங்களது பணத்தைத் திருப்பிக் கொடுங்கள் என வங்கி வாடிக்கையாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். அதன்படி நேற்று நடைபெற்ற போராட்டத்தில் சஞ்சய் குலாதி என்பவர் கலந்துகொண்டார். அவர் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். அந்த நிறுவனம் நிதி நெருக்கடியால் சமீபத்தில் மூடப்பட்டது. அதனால் சஞ்சய் குலாஸ்தி வேலையிழந்துள்ளார்.
அவரது மகன் ஒரு சிறப்புக் குழந்தை. சிகிச்சைக்காக அவரது மகனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதனால் செலவுகள் அதிகமாக இருந்தும் பணம் எடுக்கமுடியாத சூழல் உருவாகியுள்ளது. அவர் தன்னிடம் இருந்த 90 லட்சம் ரூபாயை எடுக்கமுடியாததால் வருத்தத்தில் இருந்துள்ளார்.
போராட்டம் முடிந்து வீட்டுக்குச் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சஞ்சய்யை பரிசோதித்த மருத்துவர் அவர் முன்பே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுதொடர்பாக வங்கியை கண்டித்தும் மோடி அரசை கண்டித்தும் எழுந்த எதிர்ப்பால் பி.எம்.சி வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து 40,000 ரூபாய் வரை பணத்தை எடுத்துக்கொள்ள ரிசர்வ் வங்கி நேற்று இரவு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!