India

“மெட்ரோ பணிக்காக 2,600 மரங்களை வெட்ட நீதிமன்றமே அனுமதி!”: ஆரே பகுதியில் 144 தடை... மக்கள் விரட்டியடிப்பு!

மும்பையில் மெட்ரோ ரயில் அமைப்பதற்காக, மும்பையின் நூரையீரல் என அழைப்படும் ஆரே காலனி பகுதியில் உள்ள 2,600 மரங்களை வெட்டப்போவதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து அந்த மரங்களை வெட்டக்கூடாது என தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் மும்பை நீதிமன்றத்தில் 4 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த 4 மனுக்களை நேற்று மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனையடுத்து மும்பையின் மரங்கள் அடர்ந்த ஆரே காலனியில் உள்ள மரங்களை வெட்டும் பணி நேற்று இரவு முதல் தொடங்கப்பட்டது. இதனையடுத்து மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து மெட்ரோ பணி நடைபெறும் இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 38 பேரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனையடுத்து இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

இதனால் போராட்ட நடவடிக்கையைத் தவிர்க்க ஆரே காலனி, கோரேகான் சோதனைச் சாவடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சி.ஆர்.பி.சி-யின் 144- வது பிரிவின்கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து போலிஸார், அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்துள்ளனர். மேலும், மக்கள் அந்தப் பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. போலிஸாரின் இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து சமூக வலைதளங்களில் #AareyForest, #SaveAareyForest போன்ற ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.