India

‘அயன்’ சூர்யாவை மிஞ்சிய கேரள இளைஞன் : கடத்தல் தங்கம் கொச்சியில் சிக்கியது எப்படி? - பகீர் தகவல்கள்!

அயல்நாடுகளில் இருந்து தங்கம், வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் இதர உதிரி பாகங்களை கடத்தி வருபவர்கள் தவறாமல் விமான நிலையங்களில் உள்ள சுங்கத் துறை அதிகாரிகளால் தினந்தோறும் பிடிபட்டு வருகிறார்கள்.

எவ்வளவு தான் சுங்கத் துறை அதிகாரிகள் இது போன்று சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை பிடித்து வந்தாலும், இந்த கடத்தல்களும் தொடர்ந்து நடந்தவண்ணமே உள்ளது.

கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்த நெளஷத் என்ற இளைஞர் ஷார்ஜாவில் விமானம் மூலம் கொச்சி விமான நிலையம் வந்தடைந்துள்ளார். வழக்கம்போல் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

அதாவது, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த ‘அயன்’ படத்தில் முதலில் கடத்தல்காரனாக வரும் சூர்யா, தங்கத்தை கடத்தி வந்து அதனை தனது தலையில் மறைத்து அதன் மீது விக் வைத்திருப்பது போன்று காட்சி இடம் பெற்றிருக்கும்.

அதுபோல, இந்த இளைஞர் மற்ற கடத்தல்காரர்களையும் விட ஒரு படி மேல் சென்று, கடத்தல் தங்கத்துக்காக தனது முடியையே தியாகம் செய்யும் அளவுக்கு துணிந்திருக்கிறார்.

பெரும்பாலும் நூதன முறையிலேயே இந்த மாதிரியான கடத்தல் வேலைகளில் ஈடுபடுவார்கள். வயிற்றுக்குள் பதுக்கி வைப்பது போன்ற பல முறையில் தங்க நகைகள் உள்ளிட்டவற்றை கடத்தி வருவது வழக்கம்.

ஷார்ஜாவில் இருந்து வந்த இளைஞர் நெளஷத், தனது தலையின் நடுப் பக்கத்தில் உள்ள முடியை மட்டும் வழித்து எடுத்து அதில், கடத்திக் கொண்டு வந்த 1.13 கிலோ தங்கத்தை பதுக்கி அதன் மீது, விக் வைத்துள்ளார்.

இதனைப் பார்க்கும்போது சாதாரணமாக, உண்மையான தலைமுடி போன்றே காணப்படுகிறது. இருப்பினும் சுங்கத் துறை அதிகாரிகள் நுணுக்கமாக நோட்டமிட்டு கடத்தல் காரனை பிடித்துள்ளனர். இதையடுத்து, நெளஷத்திடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.