India

உடைக்க முடியாததால் ஏ.டி.எம்மையே தூக்கிக்கொண்டு தப்பித்த கொள்ளையர்கள்!

ரூபாய் 30 லட்சம் பணத்துடன் ஏ.டி.எம் இயந்திரத்தை கொள்ளையர்கள் பெயர்த்து எடுத்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சட்னா மாவட்டம், அமர்படான் நகரில் ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம் உள்ளது. இந்த ஏ.டி.எம் மையத்திற்கு நேற்று அதிகாலை 2 மணியளவில் சிலர் காரில் வந்துள்ளனர். பணம் எடுப்பதுபோல உள்ளே சென்ற மர்ம நபர்கள், உள்ளே சென்றதும் அங்கிருந்த சிசிடிவி கேமரா மீது ஸ்பிரே அடித்து லென்ஸை மறைத்துள்ளனர்.

பின்னர் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால், அதை உடைக்க முடியாததால் இயந்திரத்தை அப்படியே பெயர்த்து எடுத்து, அவர்கள் வந்த வாகனத்தில் கட்டி இழுத்துச் சென்றுள்ளனர்.

ஏ.டி.எம் மையத்தின் அருகில் உள்ள ஒரு கடையின் காவலாளி, சந்தேகப்பட்டு கடை உரிமையாளரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அவர் போலிஸுக்கு தகவல் கொடுத்து, போலிஸார் வருவதற்குள் கொள்ளையர்கள் தப்பிவிட்டனர்.

கொள்ளையடிக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தில் ரூபாய் 29.55 லட்சம் பணம் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ.டி.எம் மையத்தில் உள்ள கேமரா சேதமடைந்ததால், அதில் கொள்ளையர்கள் பதிவாகவில்லை.

எனவே, அப்பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து கொள்ளையர்களைப் பிடிக்கும் முயற்சியில் போலிஸார் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.