India

#Alert வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்!

ஒவ்வொரு ஆண்டும் முந்தைய நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை ஜூலை 31ம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும். இந்த ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31ம் தேதி முடிவடைந்த நிலையில், மேலும் ஒரு மாத காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இந்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. மாத சம்பளம் வாங்குபவர்கள் தொடங்கி பல்வேறு வகைகளிலும் வருமானம் பெறுபவர்கள் உட்பட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தோரும் 2018-2019ம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு இன்று (ஆகஸ்ட் 31) கடைசி நாள் ஆகும்.

இதற்கிடையே, செப்டம்பர் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின. இதனால், அதிர்ச்சியடைந்த வருமான வரித்துறை அப்படி எந்த திட்டமும் இல்லை என விளக்கமளித்து, இன்றே கடைசி நாள் எனத் திட்டவட்டமாக அறிவித்தது.

இன்றைய தேதிக்குப் பிறகு 2018-2019ம் நிதி ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வோருக்கு அபராத கட்டணம் வசூலிக்கப்படும். வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் இருப்பவர்கள் நாளை முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால் ரூ.1,000 வசூலிக்கப்படும்.

ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்தை தாண்டியவர்கள் செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து டிசம்பர் 31ம் தேதி வரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால் ரூ.5,000, அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதியில் இருந்து மார்ச் 31ம் தேதி வரை தாக்கல் செய்தால் ரூ.10,000 வசூலிக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குப் பின்னர் 2018-2019ம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யமுடியாது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் வசதிக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரி அலுவலக எல்லைக்கு உட்பட்ட வருமான வரி சேவை மையங்கள் இன்று திறந்திருக்கும். வருமான வரி செலுத்துபவர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை வருமான வரித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.