India

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வந்தது எப்படி? 370, 35A ஆகிய சாசன சட்டங்கள் காஷ்மீரை காத்தது எப்படி?

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஜம்மு காஷ்மீரை ஆண்ட, மகாராஜா ஹரிசிங், மக்களின் நலன் கருதி ஜம்மு - காஷ்மீர் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க 1949ம் ஆண்டு சம்மதித்தார்.

இதனையடுத்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டது. அந்த சமயம், காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்டதால் இன்று வரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்றே அழைக்கப்பட்டு வருகிறது.

ஆரம்ப காலத்தில் ஜம்மு - காஷ்மீருக்கு தனிக் கொடி, அரசியல் சாசனங்கள் என சுயாட்சி கொண்ட மாநிலமாக இருந்தது. பின்னர் இந்திய நாட்டுடன் இணைந்ததை அடுத்து, மற்ற மாநிலங்களை போன்று இல்லாமல், மகாராஜா ஹரிசிங் விதித்த நிபந்தனைகள் படி சில சிறப்பு அந்தஸ்துகள் அம்மாநிலத்துக்கு மட்டும் வழங்கப்பட்டன. இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவில் உள்ள 370-ன் கீழ் சிறப்பு சலுகைகள் ஜம்மு காஷ்மீருக்காக உருவாக்கப்பட்டது.

370 அரசியல் சாசனம் சட்டம் என்ன சொல்கிறது?

1. வெளியுறவு, தகவல் தொடர்பு மற்றும் ராணுவம் ஆகிய துறைகளை தவிர பிற துறைசார்ந்த நடவடிக்கைகள் மீது மத்திய அரசு நிறைவேற்றும் சட்டங்களை ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையின் சம்மதத்துடன் இயற்றாவிடில் அது இம்மாநிலத்திற்கு பொருந்தாது.

2. மற்ற மாநிலத்தைச் சேர்ந்த மக்கள், காஷ்மீரில் சொத்துகளை வாங்க முடியாது. ஆனால், மற்ற மாநிலங்களில் காஷ்மீர் மக்கள் சொத்துகளை வாங்கலாம்.

3. வெளிமாநில ஆண்களை காஷ்மீரில் வாழும் பெண்கள் மணமுடித்தால் அவர்களால் இங்கு சொத்துகளை வாங்க முடியாது. ஆனால், வெளிமாநில பெண்களை திருமணம் செய்துக்கொள்ளும் காஷ்மீரைச் சேர்ந்த ஆண்களுக்கு இது பொருந்தாது.

4. மாநிலத்தின் எல்லைகளை விரிவுபடுத்தவோ, குறைக்கவோ முடியாது என்கிறது அரசியசல் சாசனத்தின் 370-வது விதி.

1954ம் ஆண்டு காஷ்மீர் மாநில அரசின் ஒப்புதலுடன், இந்திய குடியரசுத் தலைவரின் ஆணைப்படி இந்திய அரசியலமைப்பு சட்டம் 370 இணைப்பு (1)ல் அரசியலமைப்பு சட்டம் 35ஏ என்ற பிரிவு சேர்க்கப்பட்டது.

35A என்ன சொல்கிறது?

1. 35ஏ பிரிவின் மூலம், ஜம்மு காஷ்மீரில் அந்த மாநில மக்களால் மட்டுமே அசையா சொத்துகளை வாங்க முடியும். வெளிமாநிலத்தவர் எவருக்கும் எந்த நில உரிமையும் கிடையாது. 10 ஆண்டுகள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வாழ்ந்தவர்களுக்கு சொத்து வாங்கும் உரிமை உண்டு.

2. வெளி மாநிலத்தவர்களால் காஷ்மீரில் அரசு வேலை, அரசு வழங்கும் சலுகைகள் மற்றும் மானியங்களை பெற முடியாது.

3. ஜம்மு காஷ்மீரின் நிரந்தர குடிமக்கள் யார் என்பதையும், அவர்களுக்கு அளிக்கவேண்டிய உரிமையை தீர்மானிக்கும் உரிமையும் மாநில அரசுக்கே உள்ளது.

4. சமத்துவ, சம உரிமை பாதிக்காத வகையில் காஷ்மீர் மாநில அரசு அதன் சட்டப்பேரவையில் எந்த சட்டத்தையும் இயற்றிக்கொள்ளலாம் என்ற அதிகாரத்தை தருகிறது சட்டம் 35A.

கடந்த பிப்ரவரி மாதம் புல்வாமா தாக்குதல் நடைபெற்றதை அடுத்து, காஷ்மீர் மாநிலத்துக்கு இதுகாறும் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்க மத்திய பா.ஜ.க அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களை போல் காஷ்மீரும் ஒன்றாக இருக்க வேண்டும் என காரணம் காட்டி, இஸ்லாமியர்கள் பெரும்பான்மையானோர் வசிக்கும் ஜம்மு காஷ்மீருக்குள் வலதுசாரிகளை உட்புகுத்துவதற்காக சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை நீக்க திட்டமிட்டுள்ளது.

காடு, மலை, கடல், நிலம், விவசாய நிலம் என இயற்கை வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பலிகொடுக்க கொஞ்சம் கூட தயங்காதது மோடியின் ஆட்சி. ஆனால், எவ்வளவு பெரிய கார்ப்பரேட்டாகவோ, உலகின் எவ்வளவு பெரிய பணக்காரராகவோ இருந்தாலும், ஜம்மு காஷ்மீரில் ஒரு சதுர அடி சொத்து கூட வாங்க முடியாத நிலை நீடிக்கிறது. அரசியல் சாசன சட்டம் 370 மற்றும் 35ஏ சட்டங்களை நீக்குவதன் மூலம், ஜம்மு காஷ்மீரை பலி கொடுத்து அம்பானிகளுக்கும், அதானிகளுக்கு விருந்து வைக்க முடியும். சிறப்பு அந்தஸ்தை நீக்கத் துடிக்கும் பா.ஜ.கவின் சூட்சமம் இதுவே .

இதன் நீட்சியாகவே தற்போது காஷ்மீரில் பல்லாயிரக்கணக்கான துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அரசியல் தலைவர்கள் கருதுகின்றனர். அவ்வாறு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டால், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும். வன்முறை வெடிப்பதற்கான அத்தனை சாத்தியக் கூறுகள் இருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.