India

ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டணம் இல்லை : ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக் கொள்கை குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் பொருளாதார நிலை மற்றும் வட்டி விகிதங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி ரெப்போ வட்டி விகிதம் 6.00% இருந்து 5.75% ஆக குறைக்கப்பட்டது. மேலும், ஆன்லைன் பணப் பரிவர்த்தனைக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தற்போது, பெரும்பாலானோர் ஆன்லைன் பேங்கிங், மொபை பேங்கிங் மூலம் பணப் பரிவர்த்தனை செய்து வருகின்றனர். RTGS, NEFT மூலமாகவும் பணப் பரிமாற்றத்தை மிக எளிதாக செய்ய முடிந்தாலும், பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இன்று RTGS, NEFT ஆகியவற்றின் மூலமாக மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்துள்ளது.

தற்போது ஏடிஎம் மூலம் செய்யப்படும் பணப் பரிவர்த்தைகளுக்கு கட்டணம் செலுத்தும் நடைமுறை உள்ளது. அதனைக் குறைப்பது குறித்து ஆலோசிக்க தனிக் குழு அமைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.