Election 2024
50 நாட்களுக்கு பிறகு கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !
பாஜக ஆளாத மாநிலங்களில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை ஏவி அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், முதலமைச்சர்கள் என பலருக்கும் குடைச்சல் கொடுத்து வருகிறது பாஜக. அதோடு ஊழல் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து தொல்லை செய்து வருகிறது. அந்த வகையில் டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பாக அமலாக்கத்துறை பல மாதங்களாக விசாரித்து வந்த நிலையில், இது தொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திராவின் YSR காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஸ்ரீனிவாசலூ ரெட்டியை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியினரை குறிவைத்து பாஜக அடக்கியது. டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை பாஜகவின் பேச்சை கேட்டு கைது செய்தது அமலாக்கத்துறை. இதைத்தொடர்ந்து ஆம் ஆத்மி அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் என குறிவைக்கப்பட்டனர்.
இவர்களை தொடர்ந்து டெல்லில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் அமலாக்கத்துறை கைது செய்தது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு தொடர்ந்து 9 முறை அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்களை, அவர் நிராகரித்து வந்த நிலையில், கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். ஒரு முதலமைச்சர் பதவியில் இருக்கும்போதே கைது செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தது.
மேலும் தற்போது வரை இது தொடர்பாக ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார். இந்த வழக்கு நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
அதன்படி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
Also Read
-
“அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக ‘ஆவணங்கள்’ விளங்குகின்றன!” : அமைச்சர் கோவி.செழியன் பேச்சு!
-
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் : கண்ணீரில் திரையுலகம்!
-
“தமிழ்நாட்டிற்கு மிகப்பழமையான கடல்சார் வரலாறுண்டு” : நீலப் பொருளாதார மாநாட்டில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
’தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ : தமிழ்நாடு முழுவதும் செப்.20,21 தீர்மான ஏற்புக் கூட்டங்கள்!
-
யார் பொறுப்பேற்பது? : விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!