Election 2024
ரூ.4 கோடி விவகாரம்... ஆஜராகாத பாஜக வேட்பாளர் நயினார்... மீண்டும் கெடு விதித்து சம்மன் அனுப்பிய போலீஸ் !
நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வரும் ஜூன் 1-ம் தேதியோடு நிறைவடைந்து, 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு மக்களுக்கு பணப்பட்டுவாடா பரிசுப்பொருட்கள் வழங்குவது தடுக்கும் நோக்கில், ஆங்காங்கே தேர்தல் பறக்கும் படையினர், போலீசார், அரசு அதிகாரிகள் என சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழலில் கடந்த ஏப்.6-ம் தேதி இரவு, தாம்பரம் இரயில் நிலையத்தில் இருந்து நெல்லை விரைவு இரயிலில் ரூ.4 கோடி பணத்தை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன், லாரி ஓட்டுநர் பெருமாள் என்று தெரியவந்தது.
மேலும் இதில் சதீஷ் என்பவர் பாஜகவின் உறுப்பினராக உள்ளது கண்டறியப்பட்டதையடுத்து, விசாரணை நடத்தியதில் அந்த ரூ.4 கோடி பணத்தை நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.
இதையடுத்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பாஜக வேட்பாளர் நயினாருக்கு சொந்தமான வீடு, நண்பர்கள் வீடு, ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் அதிகாரிகள், வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு ரூ.2 லட்சம் பணம், வேஷ்டி, ஃபுல் பாட்டில், டின் பீர் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.
தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 14-ம் தேதி பா.ஜ.க. மாநில தொழில்துறை பிரிவு துணைத்தலைவர் கோவர்தனன் உள்பட 4 பேருக்கு தாம்பர பெருநகர காவல்துறை சம்மன் அனுப்பியது. இதையடுத்து இந்த விவகாரத்தின் முக்கிய புள்ளியான பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கும் சம்மன் அனுப்பட்டது.
ஆனால் கடந்த 22-ம் தேதி நயினார் ஆஜராக வேண்டிய நிலையில், அவர் ஆஜராகவில்லை. தன்னால் ஆஜராக முடியாது என்று கூறி, தனது வழக்கறிஞர் மூலம் இன்னும் 10 நாட்கள் கால அவகாசம் கேட்டார் நயினார். இதையடுத்து வரும் மே 2-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் காவல்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. நயினார் மட்டுமின்றி அவரது உறவினர் மணிகண்டன என்பவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Also Read
-
இலக்கிய மாமணி விருதுகள் 2024 : 3 தமிழறிஞர்களுக்கு வழங்கி சிறப்பித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.20.89 கோடியில் 4 முடிவுற்ற பணிகள்... திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இவைதான் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் மோடி செய்யும் தாக்குதல்கள்..” - பட்டியலிட்டு முரசொலி காட்டம்!
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!