Election 2024

ராஜபுத்திரர்கள் குறித்த பேச்சு: மன்னிப்பு கேட்டும் சிக்கலில் ஒன்றிய அமைச்சர் -குழப்பத்தில் பாஜக -பின்னணி?

நாடளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தங்கள் கட்சிகளின் வேட்பாளர்களை அறிவித்து, தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் பாஜக மட்டும் ஒவ்வொரு முறையும் சர்ச்சையில் சிக்கி வருகிறது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் வேட்பாளராக தற்போதுள்ள ஒன்றிய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா (Parshottam Rupala) பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இந்த சூழலில் இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பேசிய இவர், “அரசர்கள் மற்றும் அரச குடும்பங்கள் கூட ஆங்கிலேயர்களுக்கு அடிபணிந்து, அவர்களுடன் குடும்ப உறவுகளை ஏற்படுத்திக் கொண்டனர்.

அவர்களுடன் உணவுகளை மாற்றியதோடு, தங்கள் வீட்டுப் பெண்களை திருமணமும் செய்து வைத்தனர். ஆனால் ருக்கி சமாஜ் (தலித் சமூகம்), ஆங்கிலேயர்களால் துன்புறுத்தப்பட்டபோதும், தங்கள் கொள்கையை விட்டுக் கொடுக்கவில்லை.” என்று தெரிவித்தார். சத்திரியர்கள் என்று கூறப்படும் ராஜ்புத் சமூகத்தை குறிப்பிட்டு ஒன்றிய அமைச்சர் பேசியதற்கு, அந்த சமூகத்தை சார்ந்த பலரும் கண்டனங்களை எழுப்பினர்.

தொடர்ந்து எழுந்து வந்த கண்டனங்களைத் தொடர்ந்து, தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டார் ரூபாலா. எனினும் இந்த விவகாரத்தை ராஜ்புத் சமூகத்தினர் விடுவதாக இல்லை. தங்களை அவ்வாறு எப்படி கூறலாம்? என்று போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மேலும் ராஜ்கோட் பாஜக வேட்பாளரான ரூபாலாவை மாற்றி, வேறு வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று பாஜகவை வலியுறுத்தி வருகின்றனர்.

ஒருவேளை பாஜக அப்படி அறிவிக்கவில்லை எனில், பாஜகவை புறக்கணிப்பதாகவும் குஜராத், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த ராஜ்புத் சமூகத்தினர் அறிவித்துள்ளனர். இவர்கள் போரட்டம் தற்போது பாஜகவுக்கு பெரிய தலைவலியாக அமைந்துள்ளது. ஏனெனில் இந்த போராட்டத்தால் அந்த மூன்று மாநிலங்களிலும் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்படும் என கூறப்படுகிறது.

முன்னதாக அரியானா மாநிலம் ஹிஸார் தொகுதியில் பாஜக சார்பில் ரஞ்சித் சிங் (Ranjit Singh Chautala), "சமூகத்தை சாதிகளாக பிரித்தது பிராமணர்கள்தான், நாட்டில் நடக்கும் அனைத்து சாதிய வன்முறை, சாதிய கொடுமைகளுக்கு பிராமணர்களே பொறுப்பு" என்று பேசியிருந்தார். இவருக்கு தொடர்ந்து கண்டனங்கள் எழவே, தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: Fact Check : ராகுல் காந்தி மீது போக்ஸோ வழக்கு? தீ போல தொடர்ந்து பொய்யை பரப்பும் பாஜக - உண்மை என்ன?