Election 2024

“அண்ணாமலைக்கு எது எடுத்தாலும் பொய் தான்!” - கோவையில் கனிமொழி எம்.பி பிரசாரம் !

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலைத் தேர்தலையொட்டி, இந்தியா கூட்டணியின் சார்பில் கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, கோவையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது மக்களிடம் கனிமொழி பேசியதாவது, “இந்த கோவை தொகுதியில் நாம் தெளிவாக வாக்களிக்க வேண்டும். இல்லையென்றால் அது இந்தியாவிற்கே பெரிய ஆபத்தாக அமையும். தனது சொந்த தொகுதியில் போட்டியிட்டால் தோல்வி அடைந்து விடுவோம் என்று இங்கு நின்றால் வானதி சீனிவாசன் மூலம் வெற்றி பெற்று விடாலாம் என்று கோவையில் நிற்கிறார் அண்ணாமலை.

பாஜக எங்கு நின்றாலும் 3-வது இடம்தான். மக்களுக்கு இடையே பொய் செய்திகளைப் பரப்புவதற்காகத் தனிக் குழுவினை வைத்துச் செயல்பட்டு வருகிறார்கள். மக்களிடம் பொய் செய்தி மூலம் பிரிவினை ஏற்படுத்திட வேண்டும் அன்று செயல்படுகின்றனர். பாஜக தலைவர் அண்ணாமலை, இதுவரை 20,000 புத்தகம் படித்துள்ளாராம். 5 வயதில் இருந்து நாள் ஒன்று 2 புத்தகம் படித்தாலும் கூட 20,000 ஆயிரம் புத்தகம் படித்து இருக்க முடியாது. அண்ணாமலைக்கு எதற்கெடுத்தாலும் பொய் தான்.

பாஜகவினர் பெரிய சலவை இயந்திரம் (Washing Machine) வைத்துள்ளனர். ஊழல் செய்த நபர் பாஜகவில் சேர்ந்தாலும் உடனே சலவை செய்து அவரை வெள்ளையாக மாற்றி விடுவார்கள். ஆனால் அவர்கள் செய்யும் ஊழலை நாம் எடுத்துரைத்தால் உடனே அவர்கள் கைது செய்யப்படுவர், அல்லது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனைக்கு உள்ளாவர்.

அதிமுக - பாஜக கூட்டணி இல்லை என்று கூறும் எடப்பாடி, எங்காவது மோடி அரசு பற்றிப் பேசுகிறாரா? இல்லை. இது சட்டமன்ற தேர்தல் என்று நினைத்து நம் அரசைப் (திமுக) பற்றி எடப்பாடி பழனிசாமி குறை கூறி வருகிறார். சேலத்தில் 2 விவசாயிகள் நிலத்தை பாஜகவினர் அபகரிக்க நினைத்தனர், அவர்கள் நிலத்தைத் தரவில்லை என்றதும் அவர்கள் மீது அமலாக்கத்துறையை ஏவி சோதனை செய்தனர்.

திமுகவை கோயிலுக்கும், இந்து மதத்திற்கும், பெரும்பான்மை மக்களுக்கு எதிரானவர்கள் என்று சொல்கிறது பாஜக. ஆனால் உண்மையில் பாஜகதான் அனைவருக்கும் எதிரான கட்சி. திமுகவின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் போன்ற திட்டங்களில் பெரும்பான்மை மக்கள் தான் பயன்பெற்று வருகின்றனர். 1,331 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்திய ஒரே ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி. சிறு கோயில் வழங்கப்படும் மானியத்தை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சம் உயர்த்தி வழங்கியவர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

யாருக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறது, இல்லை என்பது முக்கியம் இல்லை. அவர்களுக்கு யார் நம்பிக்கையாக இருக்கிறார் என்பதுதான் முக்கியம். ரூ.770 கோடி ஒதுக்கீடு செய்து, இந்த பகுதியின் தண்ணீர் தட்டுப்பாட்டைச் சரி செய்து வரும் திமுக ஆட்சி. நாம் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றால் நமது வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அவர்களை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார்.

Also Read: இது கூட தெரியாதா ? தவறான முத்திரைத்தாளில் வேட்புமனு தாக்கல் செய்த அண்ணாமலை- நிராகரிக்காத தேர்தல் ஆணையம்!