DMK

’சக மாணவியை பாலியல் வல்லுறவு செய்ய வேண்டும்’ - 14 வயது சிறுவர்களின் WhatsApp உரையாடல்: பெற்றோர் அதிர்ச்சி

மும்பையில் உள்ள இன்டர்நேஷனல் பள்ளி ஒன்றில் மேல்நிலை வகுப்பில் பயிலும் மாணவியின் பெற்றோர் கடந்த வாரம் பள்ளி நிர்வாகத்திடம் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

அந்தப் புகாரில் தன் மகள் படிக்கும் வகுப்பில் சில மாணவர்கள் அவரிடம் பாலியல் தொல்லை தரும் வகையில் அநாகரிகமான முறையில் பேசுவதாகவும், அதனால் மாணவி பள்ளிக்குச் செல்லவே அச்சப்படுவதாகவும் கூறியுள்ளனர்.

இதனையடுத்து பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடத்தியதில், அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. விசாரணையின் போது மாணவர் ஒருவரின் செல்போனை சோதனை செய்து பார்த்தபோது டீனேஜ் மாணவர்கள் சிலர் வாட்ஸ்-அப் குழுவில் தகாத முறையில் பாலியல் அரட்டை அடித்துள்ளது தெரியவந்துள்ளது.

அந்த வாட்ஸ்-அப் குழுவில் 8 மாணவர்கள், பெண்களை ’பாலியல் வல்லுறவு’ செய்வது குறித்து வன்மத்துடன் பேசியுள்ளனர். வகுப்பில் உடன் படிக்கும் சக மாணவிகளின் உடல் உறுப்புகளை வர்ணித்தும் தவறான வகையில் பேசியுள்ளனர். அதில் ஒரு மாணவியை மட்டும் குறிவைத்து அவர்கள் பேசியதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதனையடுத்து வாட்ஸ்-அப் குழுவில் பேசிய 8 மாணவர்களையும் பள்ளி நிர்வாகம் இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தச் செய்தி மும்பை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கூறுகையில், “இந்த மாணவர்கள் அனைவருமே வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். படிக்கும் வயதில் விலையுர்ந்த செல்போனை மாணவர்களுக்கு வாங்கிக் கொடுத்ததன் விளைவே இத்தகைய செயலில் அவர்கள் ஈடுபடக் காரணம்.

அவர்கள் அனைவரையும் முறையாக விசாரணை நடத்தி, மன நல ஆலோசனை அளிக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார். இதுகுறித்து குழந்தைகள் நல ஆணையம் விசாரிக்கவேண்டும் எனவும் பெற்றோர்கள் பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read: மாணவிக்கு பாலியல் தொல்லை : ஷூவால் இளைஞர்களை சரமாரியாக தாக்கிய பெண் போலிஸ் - வைரல் வீடியோ!