Cinema

அருவருக்கத்தக்க ஆணாதிக்க மொழி : நடிகை கெளரி கிஷனிடம் சர்ச்சை கேள்வி கேட்ட YouTuberக்கு வலுக்கும் கண்டனம்!

’96’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கெளரி கிஷன். வளர்ந்து வரும் இளம் நடிகையான இவர் ’அதர்ஸ்’ என்ற படத்தில் நடந்துள்ளார். இப்படம் திரையரங்களில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ’அதர்ஸ்’ படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது யூடியூப் பத்திரிகையாளர் ஒருவர், நடிகை கெளரியின் உடல் எடை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்போது, ”எனது உடல் எடை குறித்து நீங்கள் எப்படி கேள்வி கேட்கலாம். இதை தெரிந்து நீங்க என்ன செய்ய போறீங்க, இப்படி ஆண் நடிகர்களிடம் கேள்வி கேட்க முடியுமா?. நடிகைகளிடம் உடல் சார்ந்த கேள்விகளை கேட்பது தவறானது” உடனே தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

இதையடுத்து ஆணாதிக்க மனோபாவத்துடன் கேள்வி எழுப்பிய யூடியூப் செய்தியாளருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. மேலும் நடிகை கெளரி கிஷனுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தென்னிந்திய நடிகர் சங்கம் தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”75 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் திரையுலகில் பெண்கள் நடிகைகளாக மட்டும் அல்லாமல் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் ஒளிப்பதிவாளராகவும் பிரகாசித்துள்ளனர். ஆனாலும் திரைத்துறையில் ஒரு பெண் நுழைந்து சாதிப்பது என்பது இன்னமும் பெரும் சவாலான ஒன்றுதான்.

அப்படி பெரும் சவாலை ஏற்று ஏதாவது ஒன்றை சாதித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பெண்கள் திரைத்துறைக்கு அடி எடுத்து வைக்கின்றனர். அப்படி திரைத்துறைக்கு வரும் பெண்களை அவர்களுக்கான பாதுகாப்பையும் அவர்கள் தன்மானத்தையும் சுய கௌரவத்தையும் பாதுகாப்பது என்பது நம் எல்லோரது கடமையும் கூட.

ஆனால் பத்திரிகையாளர் சந்திப்புகளில் ஒரு சில வக்கிரமான நபர்கள் பத்திரிக்கையாளர்கள் போர்வையில் நடிகைகளை பார்த்து ஏளனமாக கேள்வி கேட்பதும் அவமானப்படுத்துவது கவலை அளிக்கிறது. நேற்று எங்களது சகோதரி ஒருவருக்கு நிகழ்ந்த நிகழ்வு அதே நபரால் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இன்னொரு சகோதரிக்கும் நிகழ்ந்தது.

பத்திரிக்கை துறையில் இது போன்ற களைகள் முளைத்திருப்பது நாம் அனைவரும் ஒன்று கூடி பேசி சரியான முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளது" என தெரிவித்துள்ளார்.

அதேபோல் சென்னை பத்திரிகையாளர் மன்றமும், சர்ச்சை கேள்விகளை எழுப்பிய YouTuber-க்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அதில், ”அதர்ஸ் திரைப்படம் குறித்த செய்தியாளர் சந்திப்பில் திரைப்படக் குழுவினருடன் பங்கு கொண்ட திரை கலைஞர் கௌரி கிஷன் அவர்களின் உடல் எடை குறித்து கேள்வி கேட்ட YouTuber-ன் செயல்பாட்டை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டிக்கிறது. இதுபோன்ற அருவருக்கத்தக்க ஆணாதிக்க மொழியில் செயல்படுகிறவர்களை சக பத்திரிகையாளர்கள் கேள்விக்கு உட்படுத்த வேண்டும்.” தெரிவித்துள்ளனர்.

Also Read: Dominant செய்யும் திவ்யாவை டார்கெட் செய்யும் போட்டியாளர்கள்: Hotel டாஸ்கால் ஆஹா ஓஹோ என மாறிய BB வீடு!