Cinema

RIP கே.பி.சௌத்ரி : தூக்கில் தொங்கிய நிலையில் ரஜினி பட தயாரிப்பாளர் மீட்பு... அதிர்ச்சியில் திரையுலகினர்!

தெலங்கானா மாநிலம் கம்மம் பகுதியை அடுத்துள்ள பொனாகல் என்ற இடத்தை சேர்ந்தவர் கே.பி.சௌத்ரி (44). மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ள இவர், திரைத்துறையில் ஆர்வம் இருந்ததால் தயாரிப்பாளராக வேண்டும் என்று எண்ணினார். அதன்படி கடந்த 2016-ம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 'கபாலி' படத்தின் தெலுங்கு தயாரிப்பாளராக திரைத்துறையில் பிரபலமானார்.

இதைத்தொடர்ந்து 'சர்தார் கப்பர்சிங்' மற்றும் 'சீதம்மா வக்கிட்லோ சிரிமல்லே செட்டு' ஆகிய தெலுங்கு படங்களின் விநியோகஸ்தராகவும் இருந்தார். மேலும் இவர் கோவாவில் பொழுதுபோக்கு மற்றும் வணிக உலகிலும் கால் பதித்தார். அங்கு அவர் ஒரு கிளப்பைத் திறந்தார்.

இந்த சூழலில் கடந்த 2023-ம் ஆண்டு 93 கிராம் கோக்கைன் வைத்திருந்ததாக கே.பி.சௌத்ரி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அடுத்தடுத்து பொருளாதார நெருக்கடி காரணமாக இவர் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் வடக்கு கோவாவில் அமைந்துள்ள சியோலிம் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் கே.பி.சௌத்ரியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. நீண்ட நேரமாக நண்பர்கள் இவரை தொடர்பு கொண்டபோதும், எந்த அழைப்புகளை ஏற்காததால், சந்தேகமடைந்த நண்பர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் பார்க்கையில் சௌத்ரி தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதையடுத்து அவரது உடலை மீட்டு போலீசார் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல தயாரிப்பாளர் கே.பி.சௌத்ரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தெலுங்கு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: உயிரிழந்த தந்தை : இறுதிச் சடங்கிற்கு மகன் கொடுத்த கொடூர யோசனை!