Cinema
செய்தித்துறை TO திரையுலகம்... ஐந்தே திரைப்படங்கள்... தமிழ் இயக்குநர் குடிசை ஜெயபாரதி மறைவு!
கடந்த 1979-ம் ஆண்டு கிரவுட் பண்டிங் முறையில் (crowd-funding) தயாரிக்கப்பட்டு வெளியான திரைப்படம்தான் 'குடிசை'. இந்த படத்தின் மூலம் அப்போது அறியப்பட்டவர் இயக்குநர் ஜெயபாரதி. 1970-ம் ஆண்டு சினிமா தொடர்பான படிப்பை முடித்துவிட்டு, தமிழில் மாற்று சினிமாவை ஏற்படுத்தும் முனைப்பில் களத்தில் இறங்கினார். இந்த 'குடிசை' படம் விமர்சன ரீதியாக பெருமளவில் பேசப்பட்டது.
திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு பத்திரிகை துறையில் பணியாற்றி வந்தார் ஜெயபாரதி. அங்கு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகளாவிய சினிமா பற்றிய விமர்சன கட்டுரைகள் எழுதி வந்தார். இந்த சூழலில்தான் இவருக்கு இயக்குநர் பாலச்சந்தர் அறிமுகம் கிடைத்தது. கடந்த 1976-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'மூன்று முடிச்சு' திரைப்படத்தில் ரஜினி நடித்த வேடத்தில் முதலில் இவரை நடிக்கவைக்க நினைத்திருந்தார் இயக்குநர் பாலச்சந்தர்.
இதுகுறித்து ஜெயபாரதியிடம் கேட்டபோது, தனக்கு இயக்கத்தில் மட்டுமே ஆர்வம் இருப்பதாக கூறி, நடிக்க மறுத்துவிட்டார். இதைத்தொடர்ந்து பலகட்ட முயற்சிகளுக்கு பிறகு 'குடிசை' திரைப்படம் வெளியானது. இதன் தொடர்ச்சியாக ‘ஊமை ஜனங்கள், ரெண்டும் ரெண்டும் அஞ்சு, உச்சி வெயில், நண்பா நண்பா, குருஷேத்திரம் உள்ளிட்ட படங்களை இயக்கினார்.
இதில் 'நண்பா நண்பா' படம் 2006-ம் ஆண்டுக்கான சிறந்த துணை நடிகர் விருதை பெற்றது. மேலும் கடைசியாக 2010-ம் ஆண்டு ‘புத்திரன்’ என்ற படத்தை இயக்கினார். இப்படத்துக்கு சிறந்த படம், சிறந்த நடிகர் - சிறப்பு விருது, சிறந்த நடிகை - சிறப்பு விருது என தமிழக அரசின் 3 விருதுகள் கிடைத்தது. திரைப்பட இயக்குனராக மட்டுமின்றி எழுத்தாளராக இருந்தார். இயக்குநர் ஜெயபாரதி, 'இங்கே எதற்காக?' என்ற பெயரில் தன் வரலாற்று நூலை எழுதியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக நுரையீரல் தோற்றால் பாதிக்கப்பட்டிருந்த இவர், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில் தீவிர சிகிச்சை பெற்று வந்த இவர், பலனின்றி இன்று (டிச.06) காலை 6 மணிக்கு உயிரிழந்தார்.
77 வயதான இயக்குநர் ஜெயபாரதி மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் எழுத்தாளர்களான து.ராமமூர்த்தி, சரோஜா ராமமூர்த்தி ஆகியவர்கள் இவரது பெற்றோர் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!