Cinema

மாநில அரசின் ‘CSpace’ OTT தளத்தை தொடங்கிய கேரள அரசு... விதிமுறைகள் என்னென்ன? - முழு விவரம் !

நவீன உலகில் அனைத்தும் நவீனமயமாக்கப்பட்டதால் நாம் அன்றாட வாழ்வின் தேவையாக அமைகிறது. முன்பெல்லாம் கிரிக்கெட் விளையாட்டுகளை முழுமையாக டிவியில், அல்லது ரேடியோ, அல்லது பேப்பர் மூலம் நம்மால் அறிய முடியும். ஆனால் இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் நம்மால் எது எங்கே எப்படி நடக்கிறது என்பதை இங்கிருந்தே பார்க்க முடிகிறது.

அதற்கு முக்கிய பங்கு வகிப்பது ஓடிடி தலமாகும். இந்த ஓடிடி தளங்களில் படங்கள், வெப் சீரிஸ், சீரியல் உள்ளிட்டவையை காணலாம். இதற்கு என்று தனியாக பணம் செலுத்த வேண்டும். இந்த பேக்கேஜ் 3, 6 மாதங்கள், ஒரு வருடம் என உண்டு. இந்த ஓடிடி தளங்களில் திரைப்படங்கள் மட்டுமின்றி, கிரிக்கெட், ஃபுட் பால், கபடி என விளையாட்டுகளையும் காணமுடியும்.

உலகம் முழுவதும் அமேசான், நெட்ஃபிளிக்ஸ் என பலவகையான ஓடிடி தளம் உள்ளது. இந்த தளங்களில் உலகத்தில் உள்ள அனைத்து மொழியிலும் பல்வேறு படங்கள் உள்ளன. இந்த ஓடிடி தளத்தின் பிரபலமானது கொரோனா நேரத்தில் இந்தியாவில் பெரும்பாலானோரால் பயன்படுத்தப்பட்டது. அப்போதிலிருந்து இப்போது வரை பலரிடமும் ஓடிடி பயன்பாடு இருந்து வருகிறது.

இந்த சூழலில் கடந்த ஆண்டு கேரளா மாநில அரசு சொந்தமாக ஒரு ஓடிடி தளத்தை தொடங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த தளத்தில் முக்கிய திரைப்படங்கள், குறும்படங்கள் உள்ளிட்டவை ஒளிபரப்படும். அதோடு இது மக்களுக்கு எளிதாகும் வகையில் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று அந்த ஓடிடி தளம் தொடங்கப்பட்டுள்ளது. C Space என்று சொல்லப்படும் இந்த ஓடிடி தளத்தை கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். கேரள மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகம் (KSFDC) இதனை இயக்குகிறது. இந்த தளத்தில் விருதுப் பெற்ற மலையாள திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் உள்ளிட்டவை தேர்ந்தெடுத்து பதிவேற்றப்படவுள்ளது. இதற்கான கட்டணம் ரூ.75 மட்டுமே. அந்த கட்டணத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கு அந்தந்த படக்குழுவினருக்கு அனுப்பப்படவுள்ளது.

இதுகுறித்து KSFDC தலைவரும் பிரபல திரைப்படத் தயாரிப்பாளருமான ஷாஜி என் கருண் கூறுகையில், “தற்போது கேரளாவில் தமிழ், தெலுங்கு மொழி படங்கள் திரையரங்குகளில் பெரும் வரவேற்பு பெற்று வசூல் பெறுகிறது. இந்த சமயத்தில் பார்வையாளர்களின் நடத்தை முறையை மாற்ற விரும்புகிறோம். அமேசான், நெட்ஃபிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்களில் மலையாள படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு, CSpace உருவாக முக்கிய காரணமாக அமைந்துள்ளது." என்றார்.

இன்று தொடங்கப்பட்ட இந்த ஓடிடி தளத்தில் முதற்கட்டமாக 35 திரைப்படங்கள், 6 ஆவணப்படங்கள், 1 குறும்படம் என மொத்தம் 42 திரைப்படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த தளமானது அன்ராய்டு, ஐ-போன் என அனைத்திலும் கிடைக்கும். CSpace ஓடிடி தளம்தான் இந்தியாவிலேயே ஒரு மாநில அரசு தொடங்கிய முதல் தளமாகும். இந்த பெருமை கேரளா அரசை சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “இட்லி, சாம்பார்... எங்க இருக்க?” - அம்பானி விழாவில் ராம்சரணை அழைத்த ஷாருக்: ரசிகர்கள் கண்டனம் - பின்னணி?