Cinema

காணாமல் போனதோ 60 சவரன்.. மீட்கப்பட்டதோ 100 சவரனுக்கும் மேல்.. தொடர் சிக்கலில் ஐஸ்வர்யா ரஜினி - பின்னணி ?

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அண்மையில் கொடுத்திருந்தார். அதில், தனது வீட்டின் லாக்கரில் இருந்த தங்க, வைர நகைகள், நவரத்தின கற்கள் ஆகியவற்றைக் காணவில்லை என்று தெரிவித்திருந்தார்.

மேலும், 2019-ம் ஆண்டு தனது தங்கை சௌந்தர்யாவின் திருமணத்திற்குப் பின்பு 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 60 சவரன் தங்க, வைர நகைகளை லாக்கரில் வைத்திருந்ததாகவும், தான் லாக்கரில் நகைகளை வைத்திருந்தது, தனது வீட்டில் வேலை பார்த்து வரும் பணிப்பெண்கள் ஈஸ்வரி, லட்சுமி மற்றும் கார் ஒட்டுநர் வெங்கட் ஆகியோருக்கு தெரியும் என்றும் அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகார் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், வீட்டில் வேலைபார்த்து வந்த ஈஸ்வரி என்ற பெண்தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இங்குத் திருடிய நகைகளை வைத்து அவருக்கு சொந்தமாக நிலம் ஒன்றை வாங்கியுள்ளதையும் போலிஸார் கண்டு பிடித்தனர்.

மேலும் 2019-ம் முதலே லாக்கரில் இருந்த நகைகளை சிறுகச் சிறுக திருடி வந்த ஈஸ்வரி, அந்த மொத்த நகைகளையும் விற்று தனது கணவர் அங்கமுத்துவின் வங்கிக் கணக்கில் செலுத்தி வந்துள்ளார். அந்த பணத்தை வைத்து துரைப்பாக்கத்தில் வீடு ஒன்றை வாங்கி வாடகைக்கு விட்டுள்ளார். இந்த விவகாரத்தை தனது கணவரிடம் இருந்து மறைக்க தான் ஐஸ்வர்யா ரஜினிக்கு பினாமி என்றும், வெளியில் யாருக்கும் சொல்ல கூடாது என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் வீட்டு பத்திரம், 100 சவரன் நகைகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டது. . இந்த சூழலில் 60 சவரன் நகைகள்தான் காணவில்லை என்று ஐஸ்வர்யா கூறிய நிலையில், 100 சவரன் நகைகள் மீட்கப்பட்டதாக போலிசார் அறிக்கை வெளியிட்டனர். இதனால் போலிஸார் நடிகர் ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் நகைகளில் மேலும் 43 சவரன் தற்போது மீட்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சிக்கலில் சிக்கியுள்ளார்.

ஐஸ்வர்யாவின் லாக்கரானது இதுவரை சுமார் 3 இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதாவது ஆகஸ்ட் 2021 வரை, செயின்ட் மேரி சாலையில் உள்ள அவரது குடியிருப்பில் இருந்த இந்த லாக்கர், பின்னர் சிஐடி காலனியில் நடிகர் தனுஷுடன் அவர் பகிர்ந்து கொண்ட குடியிருப்புக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து மீண்டும் செப்டம்பர் 2021 இல் செயின்ட் மேரி சாலை அடுக்குமாடி குடியிருப்புக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து ஏப்ரல் 9, 2022 அன்று, லாக்கர் நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “நான்தான் ஐஸ்வர்யா ரஜினிக்கு பினாமி..” - கணவரிடமே நேக்காக ஏமாற்றிய பணிப்பெண்.. விசாரணையில் அதிர்ச்சி !