Cinema

“துப்பாக்கி படத்தில் இந்த சீன் கார்த்திக்கை வைத்து எழுதியதுதான்” - விஜய் டயலாக்கை பேசி AR முருகதாஸ் கலகல!

தற்போது தமிழில் முன்னணி இயக்குநராக இருப்பவர்தான் ஏ.ஆர்.முருகதாஸ். ஆரம்ப காலத்தில் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட சிலரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர், மதுரை மீனாட்சி, பூச்சிடவா ஆகிய படங்கள் மூலம் எழுத்தாளராக அறிமுகமானார்.

பிறகு 2001-ல் அஜித் நடிப்பில் வெளியான 'தீனா' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், அந்த படத்தின் மூலமே தமிழ் சினிமாவில் அறியப்பட்டார். அந்த படம் அவருக்கு பெரிய ஹிட் கொடுக்கவே, அடுத்த ஆண்டே விஜயகாந்தை வைத்து 'ரமணா' படத்தை இயக்கினார். இன்றளவும் நின்று பேசும் படமாக இருக்கும் இந்த படம், மாபெரிய ஹிட் கொடுத்தது.

தொடர்ந்து 2 படங்கள் பெரிய ஹிட் கொடுக்கவே பெரிய அளவில் தமிழ் சினிமாவில் அறியப்பட்டார். சூர்யாவின் கஜினி, 7-ம் அறிவு, விஜயின் துப்பாக்கி, கத்தி, சர்க்கார் என தொடர்ந்து படங்களை இயக்கினார். இவர் இயக்கிய படங்கள் பெரும்பாலும் ஹிட் கொடுத்தவையாகவே அமைந்துள்ளது. இயக்குநராக மட்டுமின்றி, 2011-ல் வெளியான 'எங்கேயும் எப்போதும்' படம் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார்.

ஜெய், அஞ்சலி, ஷர்வானந்த், அனன்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து வத்திக்குச்சி, ராஜா ராணி, மான் கராத்தே, 10 எண்றதுக்குள்ள உள்ளிட்ட படங்களை தயாரித்த இவர், தற்போது 16 ஆகஸ்ட் 1947 படத்தையும் தயாரித்துள்ளார்.

என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் கெளதம் கார்த்திக், ரேவதி, புகழ், ரிச்சர்ட் ஆண்ட்சன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கெளதம் கார்த்திக், ரேவதி, ஏ.ஆர் முருகதாஸ் உட்பட திரைப்பட குழவும், சிறப்பு விருந்தினராக நடிகர் சிவ கார்த்திகேயனும் கலந்துகொண்டனர். தொடர்ந்து பலரும் இந்த திரைப்படம் குறித்து சில அனுபவங்களை மேடையில் பகிர்ந்து கொண்டனர்.

அப்போது பேசிய ஏ.ஆர் முருகதாஸ், "நான் இப்போது இந்த மேடையில் நிற்கிறேன் என்றால் 100 பேர் எனக்கு கொடுத்த கை, 100 பேர் போட்ட பிச்சைதான் காரணம். இந்த படத்தை இயக்கிய பொன்குமார் எப்படி என்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றினாரோ, நானும் அதே போல் பணியாற்றினேன். நான் கேரியரில் சாப்பாடு வாங்கிக்கொண்டு போகாத கடைகளே இல்லை. டீ கிளாஸை கழுவிருக்கேன்; பிளேட் கழுவிருக்கேன். 10 பேருக்கு ஒரே நேரத்தில் டீ கொடுத்து, அவர்கள் திருப்பி தரும் கிளாஸையும் கழுவிருக்கேன்." என்று தனது முன்னாள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

மேலும் பேசிய அவர், "நான் ரோமன்ஸ் சீன் எழுதும்போது கார்த்திக்கை (நவரச நாயகன் கார்த்திக்) மனதில் வைத்து தான் எழுதுவேன். துப்பாக்கி படத்தில் பார்த்தால் நன்றாக தெரியும். அதில் ஜெயராமை திருமணம் செய்துகொள்ளும்படி காஜலிடம் விஜய் கூறுவார். அப்போது விஜய் "பெரியவங்கள அப்படி எல்லாம் பேசக்கூடாது. ஒழுங்கா அவர கல்யாணம் பண்ணிக்கோ" என்று சொல்லும் டயலாக் கார்த்திக்கை மனதில் வைத்து கூறியதுதான்" என்று கார்த்திக்கின் மாடுலெஷனை செய்து காட்டினார்.

இவரை தொடர்ந்து பேசிய நடிகர் சிவ கார்த்திகேயன், "எனக்கு கார்த்திக் சாரை ரொம்ப பிடிக்கும். கார்த்திக் சார் ரொம்ப ஸ்வீட். கவுதம் கார்த்திக் மீட் பண்ணதுக்கு அப்புறம் ரொம்ப வருஷம் கழிச்சு, கார்த்திக் சாரை பார்த்தேன். ரொம்ப அழகான நடிகர். அதை தாண்டி சார் கிட்ட ரொம்ப பிடிச்ச விஷயம், எந்த நடிகருடைய சாயலும் அவரிடம் இருக்காது. எல்லாரிடமும் யாருடைய சாயலாவது பார்க்க முடியும். என்னை எடுத்துக் கொண்டால் நான் நடிப்பதில் பாதி ரஜினி சாருடைய சாயல் இருக்கும்" என்றார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது அவர்களிடமும் தனது நடிப்பில் ரஜினி சாயல் இருப்பதாகவும், எனக்கு தெரியாமல் மற்ற நடிகர்களின் சாயலும் இருக்கலாம் என்றும் தெரிவித்தார். மேலும் தான் மிமிக்கிரி செய்யும்போது ரஜினியின் குரலில் நன்றாக செய்வதாக பலரும் பாராட்டியதாக தெரிவித்தார்.

Also Read: சிம்பு குறித்த ஒரே கேள்வி.. ஆவேசப்பட்டு கடலில் குதித்த கூல் சுரேஷ்.. பதறிப்போன நெறியாளர்.. என்ன நடந்தது ?