Cinema

“தமிழ்நாட்டுக்கு பதிலாக இந்தியாவின் பெயரை மாற்றுங்கள்..” -ஆதங்கப்பட்ட LEO பட டயலாக் ரைட்டர்-காரணம் என்ன?

கடந்த 2017-ல் வைபவ், பிரியா பவானிசங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'மேயாத மான்' திரைப்படம் மூலம் இயக்குநராக அறியப்பட்டவர் ரத்தின குமார். இந்த படம் ஹிட் கொடுக்க, அடுத்த 2 ஆண்டுகளில் அமலாபாலை வைத்து 'ஆடை' என்ற படத்தை இயக்கினார். சொல்ல வந்த கருத்து நன்றாக இருந்தாலும், இந்த படம் பல விமர்சனங்களுக்கு உள்ளானது.

அதோடு இந்த படத்தில் நடித்ததற்காக அமலா பாலும் பல விமர்சனங்களை சந்திக்க நேரிட்டது. பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' படத்தின் மூலம் திரையுலகில் டயலாக் ரைட்டராக அறியப்பட்டார். அந்த படம் பெரிய அளவில் ஹிட் கொடுக்க, மீண்டும் லோகேஷுடன் கை கோர்த்தார்.

அதன்படி 'விக்ரம்' படத்திற்கும் இவர் வசனம் எழுதினார். அந்த படமும் இவருக்கு பெரிய அளவில் பெயர் பெற்றுக்கொடுக்க, மீண்டும் இயக்கத்தில் குதித்தார். அதன்படி சந்தானம் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'குலு குலு' படத்தை இயக்கினார். இந்த படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு வெர்ஷன் உருவாகியுள்ளது. அதில் 'இந்திய பிரதமர்' என குறிப்பிடப்படும் ஒரு காட்சியை சென்சார் போர்டு அதிகாரிகள் எந்தவித விளக்கமும் இன்றி நீக்கி உள்ளனர். இதுகுறித்து ரத்தின குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஜனநாயகத்தில் கலை என்பது முக்கியமான தூண். அத்தகைய கலை மீது சென்சார் போர்டு மிகவும் கடுமையாக நடந்துகொள்கிறது. தமிழ்நாட்டை தமிழகம் என மாற்ற முயல்வதற்கு பதில் இந்தியாவை United States of India என பெயர் மாற்றம் செய்துவிடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. முன்னதாக இதே போல் பல படங்களுக்கு CBFC என்று சொல்லப்படும் சென்சார் போர்டு பல படங்களுக்கு காரணங்கள் இன்றி அந்த படத்தின் டயலாக், வார்த்தை உள்ளிட்டவற்றை நீக்கியுள்ளது.

இதனை தி இந்து ஆய்வு செய்து கட்டுரையாக வெளியிட்டுள்ளது. அதில், "இந்தியாவின் பல பகுதிகளில் இறைச்சியை உட்கொள்வது சட்டப்பூர்வமாக இருந்தாலும், தமிழ் திரைப்படமான சதுரங்க ஆட்டம் என்ற படத்தில் 'மாட்டிறைச்சி' என்ற வார்த்தையை நீக்கியுள்ளது.

மேலும் 2020-ல் வெளியான தமிழ்த் திரைப்படமான மூக்குத்தி அம்மன் என்ற கற்பனை-நகைச்சுவை திரைப்படத்தின் இந்தி மொழிமாற்றத்தில், "பிரதமர்" பற்றிய குறிப்பை நீக்குமாறு உத்தரவிடப்பட்டது, அதில் "தவறான குறிப்பு" என்று ஒரு அடைப்புக்குறிக்குள் கூறப்பட்டுள்ளது." என்று குறிப்பிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சிறந்த இயக்குநர், இசையமைப்பாளர், நடிகர்.. திரைப்பட விழாவில் விருதுகளை அளிக்குவிக்கும் பொன்னியின் செல்வன்!