Cinema

ஜாலியன் வாலாபக்கின் உண்மை வரலாற்றைப் பேசும் ‘Sardar Udham’ : மோடி அரசுக்கு எதிரான விடுதலைப் போராட்டம்!

Sardar Udham என்கிற ஒரு இந்திப் படம் அக்டோபர் 16ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியானது. எல்லா தரப்புகளிலிருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது இப்படம்.

ஜாலியன் வாலாபக் படுகொலை நினைவில் இருக்கலாம். 1919ஆம் ஆண்டு ஜெனரல் டயர் என்கிற ஆங்கிலேய அதிகாரியால் 400க்கும் மேற்பட்டோர் துள்ளத் துடிக்க சுட்டுக் கொல்லப்பட்ட இடம். குழுமியிருந்த ஆயிரக்கணக்கானோர் மீது சரமாரியாக சுடப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஜாலியன் வாலாபக் படுகொலை இந்திய சுதந்திர வரலாற்றில் மிகப் பெரிய திருப்புமுனை.

ஜாலியன் வாலாபக் படுகொலையின் பின்னணியில் நிறைய வரலாற்றுச் சம்பவங்கள் இருந்தன. காந்தியின் வருகை பெரும் அரசியல் போக்கை உருவாக்கியிருந்த நேரம் அது. ஜாலியன் வாலாபக்கில் நடந்த கூட்டமும் கூட இரு காங்கிரஸ்காரர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்துதான் நடந்தது. அச்சமயத்தில் ரவுலட் சட்டம் பிரிட்டிஷாரால் இயற்றப்பட்டு நாட்டில் கொந்தளிப்பையும் உருவாக்கியிருந்தது. இவை எல்லாவற்றைக் காட்டிலும் ஒரு 12 வயது சிறுவன் ஜாலியன் வாலாபக்குக்கு அந்த மண்ணை படுகொலையின் நினைவாக எடுத்துச் சென்ற சம்பவமும் நடந்தது. அவன்தான் அடுத்த சில வருடங்களில் இந்தியாவின் போலி அரசியல் போக்குகளை உலுக்கி உலகுக்கு சேதி சொல்லவிருந்த பகத் சிங்!

பல நூறு பேரை கொன்று குவித்தது ஜெனரல் டயர் என்றால் அதற்கு உத்தரவு இட்டவன் மைக்கெல் ஓ ட்வையர். ஜாலியன் வாலாபக் சம்பவம் நடந்த 20 வருடங்கள் கழித்து லண்டனில் மைக்கெல் ஓ ட்வையர் சுட்டுக் கொல்லப்பட்டான். சுட்டவர் பெயர்தான் உத்தம். உத்தம் சிங்!

இந்திய விடுதலைக்கு எந்த பங்களிப்பும் செய்யாமல் ‘கண்மணி அன்போடு’ எனக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தோர் நாட்டை ஆளும்போது தம் இன்னுயிரை நீத்துப் போராடிய இடதுசாரிகள், இஸ்லாமியர்கள் மற்றும் சீக்கியர்களின் கதையை எந்த சமரசமுமின்றி சொல்லியிருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர்.

படத்தின் கதை அனைவருக்கும் தெரிந்த கதைதான். மேலே சொன்ன ஒரு வரிதான் கதை. ஆனால் சொல்லப்பட்டிருக்கும் அரசியல் புதிது. இதுவரை மறைக்கப்பட்ட அரசியல். இன்று மிகவும் தேவையான அரசியல்.

பகத்சிங்கோ படத்தில் வரும் உத்தம் சிங்கோ பிரிட்டிஷ்ஷை எதிர்த்து போராடவில்லை. பிரிட்டிஷ்ஷின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடினார்கள். இந்தியாவின் வளங்கள் சுரண்டப்படுவதை எதிர்த்துப் போராடினார்கள். இந்தியாவின் விடுதலையாக அவர் விரும்பியது பூரண விடுதலையைத்தான். ஆனால் இப்படத்தில் இந்தியாவுக்கு விடுதலை கொடுப்பதை பற்றி இங்கிலாந்தின் ஆறாம் ஜார்ஜ் ஆலோசிக்கும் காட்சியில் வரும் வசனத்தைப் போல, ‘விடுதலை கொடுத்தாலும் அவர்களின் ஏகபோக உரிமை’ இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

விளைவாகத்தான் இன்றும் நீள்கின்றன போராட்டங்கள். ஜாலியன் வாலாபக் போல டெல்லி எல்லையில் சீக்கிய விவசாயிகள் திரண்டு போராடி பல மாதங்களாகின்றன. என்னவென கேட்க நாதி இல்லை. இதுதான் இங்கு விடுதலை. இவர்கள்தான் இங்கு ஆளுபவர்கள். இவர்கள்தான் இங்கிலாந்து முடியாட்சி உள்ளிட்ட உலக ஏகாதிபத்தியங்களின் ஏவலாளர்கள். இன்றும் நாம் விடுதலைப் போராட்டத்தில்தான் இருக்கிறோம்.

படத்தைப் பாருங்கள் புரியும்.

Also Read: நிறவெறியை மீறி எழுந்த நாசா பெண்கள்... உண்மைக் கதையைச் சொல்லியிருக்கும் ‘Hidden Figures’ திரைப்படம்!