கரூரில் தி.மு.கவின் முப்பெரும் விழா கரூரில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பெரியார் விருது கனிமொழி எம்.பிக்கும், அண்ணா விருது சுப.சீத்தாராமன் அவர்களுக்கும், கலைஞர் விருது சோ.மா.இராமச்சந்திரன் அவர்களுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது குளித்தலை சிவராமன் அவர்களுக்கும், பேராசிரியர் விருது மருதூர் இராமலிங்கம் அவர்களுக்கும், மு.க.ஸ்டாலின் விருது பொங்கலூர் நா.பழனிச்சாமிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”சென்னை ராபின்சன் பூங்காவில் திமுகவை தொடங்கியபோதும் மழை கொட்டியது. கொட்டும் மழையிலும் தொடங்கி வைக்கப்பட்ட கழகம் 75 ஆண்டுகளை அல்ல, நூற்றாண்டை காணப் போகிறது. கொட்டும் மழையிலும் உங்களின் எழுச்சியை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது. இது கரூர் அல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊர் இது.
பொதுக்கூட்டம் என்று கூறிவிட்டு மாபெரும் எழுச்சி மாநாட்டையே ஏற்பாடு செய்துள்ளார் செந்தில் பாலாஜி. மேற்கு மண்டலத்தில் திமுகவின் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார் செந்தில் பாலாஜி. வெளியே இருந்தால் தூங்க முடியாது என்று சிலர் செந்தில்பாலாஜியை முடக்க பார்த்தனர். தான் எடுத்த பணியை வெற்றிகரமாக முடித்துக் காட்டுவார் செந்தில் பாலாஜி.
14 வயதில் கருப்பு, சிவப்பு கொடி பிடித்து கழகத்துக்காக உழைக்க தொடங்கினேன். ஓயாமல் உழைக்கின்ற தொண்டர்களை சந்திக்கும் போது எனக்கு புது எனர்ஜி வந்துவிடும். அடக்குமுறை,சிறைச்சாலை என பல போராட்டங்களை தாண்டி உடன்பிறப்புகளாகிய நீங்கள் என்னை தலைவராக்கியுள்ளீர்கள். ஒயாமல் உழைக்கும் உதயசூரியனாய் உடன்பிறப்புகள் திகழ்வதால் தான் தி.மு.க-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியவில்லை.
நாடே திரும்பிப் பார்க்கும் திராவிட மாடல் ஆட்சியை உருவாக்கி என்னை முதலமைச்சராக்கியது நீங்கள்தான். நாம் அடுத்து செல்லக் கூடிய பாதையை வெற்றிப் பாதையாக செப்பனிட முப்பெரும் விழாவில் கூடியிருக்கிறோம்.
பெயார் விருது கனிமொழி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் பார்த்தால் கனிமொழி. நாடாளுமன்றத்தில் பேசினால் கர்ஜனை மொழி. திராவிட இயக்கத்தின் திருமகளாய், பெரியாரின் பேத்தியாய் பாராளுமன்றத்தில் ஒலிக்கிறார் கனிமொழி.
திறமை, உழைப்பு, அறிவு, ஆற்றல் ஒருங்கே பெற்ற கூட்டம் தான் திமுக. 2019 முதல் எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளோம். எதிரிகளை கலங்கடிக்க கூடிய வெற்றியை பெற்றுள்ளோம். இந்த வெற்றிப் பயணம் மக்கள் ஆதரவுடன் 2026-லும் தொடரும். திராவிட மாடல் 2.0 ஆட்சி நிச்சயம் அமையும்" என தெரிவித்துள்ளார்.