Cinema
“அடிப்படையே தெரியாதபோது உங்களுக்கு எதுவுமே புரியாது” - வெறுப்பை உமிழ்ந்தவருக்கு யுவனின் தெறி பதில்!
தமிழ்த் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா. தற்போது இவர் பிஸியாக பல படங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். யுவன் சில வருடங்களுக்கு முன் அவரது சொந்த காரணத்திற்காக, இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.
இது பற்றி கேள்வி முன்வைக்கப்படும் போதெல்லாம், இஸ்லாம் மதம் எனக்கு வேண்டிய ஆறுதலும், வாழ்க்கை பற்றிய புரிதலையும் கொடுத்திருக்கிறது என பதில் கூறியிருக்கிறார். ஆனால், அவர் மதம் மாறிய பொழுது, அந்த செய்தி பெரிய அளவில் பேசப்பட்டது.
இப்போது மீண்டும் யுவன் பின்பற்றும் மதம் சார்ந்த சர்ச்சையை முகநூலில் எழுப்பி இருக்கிறார் ஒருவர். நேற்று குரான் சம்பந்தப்பட்ட வாசகம் ஒன்றை முகநூலில் பதிவிட்டிருந்தார் யுவன் ஷங்கர் ராஜா. அந்த பதிவிற்கு கீழே பயனர் ஒருவர் எழுதிய கமெண்ட்டில், "நான் உங்களை விரும்பியதும், பின்தொடர்வதும் நீங்கள் யுவன் சங்கர் ராஜாவாக பிறந்ததால் தான். மதத்தை பரப்பும் தளம் இது இல்லை. இப்படியே தொடர்ந்தால் உங்கள் பக்கத்திலிருந்து வெளியேறிவிடுவேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த யுவன், "வெளியேறிவிடுங்கள்" எனக் கூறினார். மேலும் இதை தொடர்ந்து, பல நெகட்டிவ் கமெண்ட்கள் வரத் தொடங்கியது. இதற்கு விளக்கம் அளிக்கும்படி "நான் நம்பும் ஒரு மதம் குறித்துப் பதிவிடுவது எப்படி இன்னொரு மதத்தை மதிக்காமல் போவது ஆகும், திரைப்பிரபலங்களும் தனி மனிதர்களே, அவர்களுக்கும் உரிமைகள் உள்ளன, என் நம்பிக்கை என் உரிமை" எனக் கூறினார் யுவன்.
மேலும் மதம் மாறிவிட்டு இன்னும் ஏன் உங்கள் பழைய பெயரையே (யுவன் ஷங்கர் ராஜா) பயன்படுத்துகிறீர்கள் என்ற கேள்வியும் எழுந்தது. அதற்கு "நான் உங்களுக்கு சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் ஒரு இந்தியன். நான் ஒரு தமிழன். நான் ஒரு இஸ்லாமியன். இஸ்லாமியர்கள் அரேபிய நாடுகளில் மட்டும் தான் இருக்கிறார்கள் என நீங்கள் நினைத்தால் அது உங்கள் அறியாமை.
மதமும் இனமும் வெவ்வேறானவை. தேசியமும் மதமும் வெவ்வேறானவை. இந்த அடிப்படை விஷயம் கூட உங்களுக்கு புரியவில்லை என்றால் எதுவும் புரியாது. வெறுப்பு பிரசாரத்தை நிறுத்துங்கள். உங்கள் மீது அமைதி நிலவட்டும்" என தன் கருத்தைத் தெரிவித்தார் யுவன். யுவனின் இந்த தெளிவான உரையாடலை பலரும் பாராட்டி சமூக வலைதளங்களில் யுவனுக்கு ஆதரவாக பகிர்ந்து வருகின்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!