இஸ்ரேல் மீதான ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் நேரடி தாக்குதலை நடத்தியது. காசா மீது வான்வெளி தாக்குதல் மட்டுமின்றி தரைவழியாகவும் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் தற்போதுவரை 50 ஆயிரத்துக்கு அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போரினை நடத்தி வந்த நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் கடந்த ஆண்டு ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்திய நிலையில், அதன் பின்னர் இந்த இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து யார் வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற பதற்றம் நிலவி வந்தது.
இந்த நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவத் தளவாடங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் நேற்று கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதற்கட்ட தகவலின்படி ஈரான் ஆயுதப்படைத் தலைமைத் தளபதி முகமது பகேரி மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி கோலம் அலி ரஷீத், அணு விஞ்ஞானிகள் முகமது மெஹ்தி தெஹ்ரான்சி மற்றும் ஃபெரேடவுன் அப்பாசி ஆகியோர் கொல்லப்பட்டதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுமார் 200 ட்ரான்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அரசும் இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தாக்குலுக்கும் தங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும், இது முழுக்க முழுக்க இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டது என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.